குடும்பம், குழந்தைகளுடன் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சைப்பிழியும் ‘காரண’ கடிதம்!
Home > தமிழ் newsமுதுகுவலியால் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தாய், மனைவி, குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கோவை மற்றும் கொங்கு மண்டலத்தையே உலுக்கியுள்ளது.
கோயமுத்தூரை அடுத்த கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் 38 வயதான பள்ளி ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூலிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியரான இவர் கடந்த சனிக்கிழமை அன்று தன் வீடிருக்கும் கருமத்தம்பட்டியில் தனது மனைவி ஷோபனா மற்றும் குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தாய் புவனேஸ்வரி ஆகிய தன் குடும்பத்தாரின் சடலங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரித்ததில் அனைவரும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிந்தது. இதில் ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் உடல் தொங்கிய நிலையிலும், மற்றவர்கள் விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் தற்கொலை செய்வதற்கான அவசியம் என்னவாக இருக்கும் என்கிற கோணத்தில் துப்பு தேடிய போலீஸாருக்கு கிடைத்தது அந்த அதிர்ச்சி கடிதம்.
தங்களின் இந்த குடும்ப தற்கொலைக்கு தன்னுடைய 12 வருட தீராத முதுகுவலியே அன்றி வேறு யாரும் காரணமில்லை என்றும் நிறைய கடன்களை வாங்கி சிகிச்சைக்கான முயற்சிகள் எவ்வளவோ செய்தும், அவற்றிற்கு பலனின்றி முதுகுவலி தீவிரமானதால் தன் உயிரிலும் மேலான மனைவி, குழந்தைகள் மற்றும் தனது தாய் ஆகியோரை விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல் அனைவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், தனக்கு கடன் கொடுத்தவர்கள் தன்னை மன்னிக்கும்படியும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் தற்கொலை செய்துகொண்ட அந்தோணி ஆரோக்கியதாஸ்.
கண்கலங்கவைக்கும் உருக்கமான இந்த கடிதத்தை படித்த பிறகு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.