திரும்பவும் விளையாடனும்.. கணுக்காலை பரிசாக கொடுப்பீங்களா?.. உலக கால்பந்தாட்ட வீரர் உருக்கம்!
Home > தமிழ் newsகணுக்காலில் உண்டான காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர் தன்னுடைய பிறந்த நாள் விழாவில் பேசியது அவரது ரசிகர்களின் மனதை உருகச் செய்துள்ளது.
உலகின் காஸ்ட்லியான கால்பந்து வீரராக வலம் வருபவர் நெய்மர். இவர் இளம் வயதிலேயே தன்னுடைய திறமையால் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர். முதலில் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடினார். பின்னர் பி.எஸ்.ஜி அணியால் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு அந்த அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 25 -ஆம் தேதி நடைபெற்ற போட்டி ஒன்றில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு மைதானத்திலேயே விழுந்துவிட்டார். உடனே அவரை ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் நெய்மரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குறைந்தது 10 மாதம் ஓய்வு தேவை என அறிவித்தனர். இதனை பி.எஸ்.ஜி அணி நிர்வாகமும் உறுதி செய்தது. இதனை அறிந்த நெய்மரின் ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.
கடந்த பிப்ரவரி மாதம் 5 -ஆம் தேதி நெய்மரின் 27 -வது பிறந்தநாள் வந்தது. இதை கொண்டாட விரும்பிய நெய்மரின் நண்பர்கள் பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு முதலில் வர விரும்பாத நெய்மர் இறுதியில் கலந்து கொண்டார். அவர் ஊன்றுகோலின் உதவியுடன் நடந்து வருவதைப் பார்த்த நெய்மரின் ரசிகர்களின் மனம் உடைந்தே போயிருக்கும்.
இதனையடுத்து விழாவில் பேசிய நெய்மர், ‘முதலில் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் நண்பர்கள் உடன் இருந்தால் கொஞ்சம் வலியை மறக்கலாம் என எண்ணியதால் இந்த விழாவில் கலந்து கொண்டேன். மேலும் ஊன்றுகோலின் துணையோடு நடப்பது ரொம்ப சிரமமாக உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்த வலியை உணரமுடியும்' என கூறினார்.
தொடர்ந்து பேசிய நெய்மர்,‘எனக்கு பிறந்த பரிசு எது வேணும் என்று கேட்டால், புதிய கணுக்கால் வேண்டும் என கேட்பேன், அதனால் நான் நேசிக்கும் கால்பந்து விளையாட்டை களத்தில் மீண்டும் ஆக்ரோசமாக விளையாட முடியும், என கண்ணீர் மல்க கூறியது விழாவில் கலந்து கொண்டவர்களை கண்ணீரால் உருக வைத்துள்ளது.