20 வயது இளம் வீரரிடம் தோல்வி.. பிரபல டென்னிஸ் சாம்பியனுக்கு வந்த சோதனை!
Home > தமிழ் newsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் வீரரான ரோஜர் ஃபெடரர் தோல்வி அடைந்து டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி கடந்த ஜனவரி 14 -ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கு பெரும் இப்போட்டி 27 -ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் ரோஜர் ஃபெடரர், டென்னிஸ் தரவரிசையில் 14-ஆம் இடத்திலுள்ள கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெஃபனாஸ்ஸை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக சென்ற போட்டியில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தனர். டைபிரேக்கர் வரை சென்ற முதல் சுற்று ஆட்டத்தை 7-6 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் கைப்பற்றினார்.
இந்நிலையில் அடுத்த நடந்த இரண்டு செட்களிலும் 7-6,7-5 என்ற செட் கணக்கில் ஸ்டெஃபனாஸ் வெற்றி பெற்றார். இதனால் கடைசி செட்டில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு ரோஜர் ஃபெடரர் தள்ளப்பட்டார். ஆனால் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கடைசி செட்டில் 7-6 என எடுத்து ஸ்டெஃபனாஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.
20 வயது இளம் வீரரிடம் ரோஜர் ஃபெடரர் தோல்வியுற்றது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஸ்டெஃபனாஸ் காலிறுதிக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் கிரீஸ் நாட்டு வீரர் என்கிற பெருமையை ஸ்டெஃபனாஸ் அடைகிறார்.