'இது தான் ஆழம் தெரியாம,கால விடக்கூடாதுனு சொல்றதா'...'போலிஸிடமிருந்து தப்பிக்க நினைத்த திருடன்'...ஆனால் நடந்தது?

Home > தமிழ் news
By |
'இது தான் ஆழம் தெரியாம,கால விடக்கூடாதுனு சொல்றதா'...'போலிஸிடமிருந்து தப்பிக்க நினைத்த திருடன்'...ஆனால் நடந்தது?

காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக,கிணற்றுக்குள் இறங்கிய திருடன் மீண்டும் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் சென்னை அம்பத்தூரில் நடந்துள்ளது.

 

சென்னை அம்பத்தூர் இந்தியன் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட 3 திருடர்கள் வீட்டினை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

 

இதனையடுத்து கடந்த 30–ந் தேதி இரவு,விஜயகுமார் வீட்டின் கதவை உடைத்து 3 திருடர்களும் உள்ளே நுழைந்தனர்.அப்போது பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர் அம்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை,கண்ட திருடர்கள் மூன்று பேரும் தப்பி ஓடினர். அதில் 2 பேர் வேறு வழியாக தப்பிவிட்டனர். ஒரு கொள்ளையன் மட்டும் இந்தியன் பேங்க் காலனியின் அருகில் உள்ள சந்திரசேகரபுரம் 3வது தெருவுக்குள் ஓடினார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திரசேகரபுரம் 3வது தெருவில் வசிக்கும்,கோபால கிருஷ்ணன் என்பவரது வீட்டின் 60 அடி ஆழ கிணற்றிலிருந்து ‘‘அய்யோ..காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று குரல் கேட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் தண்ணீரில் நீந்தியபடி ஒருவர் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

 

உடனே அம்பத்தூர் காவல்துறையினருக்கும்,தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 பேர் கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்டனர்.

 

மீட்கப்பட்ட நபரிடம்  விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது  அவர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெய்சிங் (44) என்பதும், இந்தியன் பேங்க் காலனியில் விஜயகுமார் வீட்டில் திருடிய மூன்று பேரில் இவரும் ஒருவர்,என்பது தெரியவந்தது.

 

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் "கடந்த 30–ந் தேதி இரவு 11 மணி அளவில் ஜெய்சிங் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து,விஜயகுமார் வீட்டில் பூட்டை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.அப்போது அங்கு வந்த போலீசாரை சற்றும் எதிர்பாராத அவர்கள் தப்பி ஓடினர். மற்ற 2 பேரும் வேறு வழியாக தப்பி ஓடிவிட, ஜெய்சிங் மட்டும் பக்கத்து தெருவில் இருந்த கிணற்றுக்குள் குதித்து உள்ளார். ஆனால் கிணறு 60 அடி ஆழம் இருந்ததால் அவரால் எளிதாக மேலே வர முடியவில்லை.

 

இதன் பின்புதான் 31–ந் தேதி காலை 11 மணி அளவில் தீயணைப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டு உள்ளார். ஜெய்சிங் சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாக கிணற்றுக்குள் இருந்துள்ளார்.கைது செய்யப்பட்ட ஜெய்சிங் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 22 வழக்குகள் உள்ளன''.

 

தொடர்ந்து அவரை போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவரது கூட்டாளிகளான கமல் மற்றும் சுரேஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.