தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது என, ஸ்டெர்லைட் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், பொதுமக்கள் 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. துப்பாக்கி சூட்டினைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையினை மூடிடக்கோரியும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது என, ஸ்டெர்லைட் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பி.ராம்நாத் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

 

பராமரிப்பு பணிகளுக்காக ஆலை மூடப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. போராட்டங்கள் எல்லாம் திடீரென எங்கிருந்தோ உருவாகுகிறது. போராட்டங்களின் பின்னணியில் ஏதோ தூண்டுதல் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

 

தொண்டு நிறுவனங்கள் சிலவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து இன்னும் பணம் வருகிறது. அப்படி வரும் நிதி இதுபோன்ற வன்முறைக்கு திருப்பிவிடப்படுகிறது. இப்பிரச்சனைகளுக்கு சட்டப்பூர்வமாகவே தீர்வு காண முடியும்.ஆலையை வேறு இடத்துக்கு மாறுவது குறித்து நாங்கள் இதுவரை யோசிக்கக்கூட இல்லை.

 

20 வருடங்களுக்கு முன்னதாக நாங்கள் தூத்துக்குடிக்கு வந்ததற்கு காரணம் உள்ளது, அந்த காரணம் இன்னும் மாறவில்லை. எனவே இரண்டாவது ஆலையை வேறு மாநிலங்களில் அமைக்க இடம் கிடைத்தும் நாங்கள் செல்லவில்லை.நாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். எங்களுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS