கர்ப்பிணி பெண் விவகாரம்: ரத்த தானம் செய்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் பரிதாப முடிவு!
Home > தமிழ் newsவிருதுநகர், சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, சிவகாசி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருந்து எடுத்து வரப்பட்டு ஏற்றப்பட்ட ரத்தத்தில், எச்ஐவி தொற்று இருந்ததால், அந்தப் பெண்ணுக்கும் எச்ஐவி தொற்று பரவிய சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியதை அடுத்து, லேப் டெக்னீசியன்ஸ், மருத்துவ பணியாளர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அறிந்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அப்பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, குழந்தைக்கு எய்ட்ஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அதன் செலவை அரசு ஏற்கும் என்று கூறினர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவர் சண்முக ராஜூ , ‘எய்ட்ஸ் தொற்று அந்த பெண்ணுக்கு நேரடியாக 350 மில்லி ரத்தத்தின் மூலம் பரவியதால் நோய்த் தாக்கம் அதிகமாக உள்ளது எனவும், சுகப்பிரசவம் அல்லது அறுவைச் சிகிச்சைக்கு பின் குழந்தை பிறந்து 12 வாரங்கள் வரை ஏ.ஆர்.டி மருந்து வழங்கப்படும் எனவும், தொடர்ந்து 6 மாதம், 45 நாட்கள், 18 மாதங்கள் என சீரிய இடைவெளியில் சோதனை செய்ய பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உறவினரைப் பார்க்க வந்த இளைஞர், ஒருவர் ரத்தம் வழங்கிவிட்டு, பின்னர் வெளிநாடு செல்வதற்கான மருத்துவ பரிசோதனையில் தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதை அறிந்துள்ளார். ஆனால் அவர் உடனே சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போன் செய்து தன்னுடைய ரத்தத்தை தானம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
எனினும் அதற்குள் இந்த சம்பவம் மருத்துவ பணியாளர்களின் கவனக்குறைவால் நடந்துவிட்டது. எனினும் கமுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தானாகவே முன்வந்து தகவல் தெரிவித்ததை பலரும் பாராட்டிய நிலையில், அவரோ குற்றவுணர்ச்சி தாளமுடியாமல் காரணமாக, உணவில் எலி மருந்து கலந்து உண்டுள்ளார். அதன் பின்னர், அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.