கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த ’தடா’.. உயர்கல்வித்துறை அதிரடி!

Home > தமிழ் news
By |
கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த ’தடா’.. உயர்கல்வித்துறை அதிரடி!

பல கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேசும் வழக்கங்கள் சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. பல கல்லூரிகளில் சைலண்ட் மோடில் போட்டுவிட்டு வகுப்புகளைக் கவனிப்பது வழக்கம். சில கல்லூரிகளில் பாடவேளையின் இடையே ஆசிரியர்கள் திடீரென கூட்டமாக க்ரைம் பிராஞ்ச் குழுவினர் போல் வந்து திடீர் செல்போன் சோதனை நிகழ்த்துவார்கள். அப்போது கிடைக்கிற செல்போன்களை ஒரு பக்கெட்டில் வாங்கிக் கொள்வார்கள். அடுத்த நாள் அந்த செல்போன்கள் ஏலத்திற்கு விடப்படும். சிலரது செல்போன்கள் நன்னடத்தை காரணமாக அவர்களிடமே ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கப்படும்.

 

இந்நிலையில், உயர் கல்வித்துறை எடுத்திருக்கும் புதிய நடவடிக்கை, கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க கூடாது என்பதுதான். இந்த தடையை விதிக்க  கல்லூரி முதல்வர்கள், செயலர்கள் ஆகியோர்களுக்கு உயர் கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.ஆண், பெண் இருபாலரும் பயிலும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன்களை வைத்துக்கொண்டு மாணவிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கிறார்கள் என்பன போன்றவற்றால், இந்த அதிரடி அறிவிப்பு வந்துள்ளதாக கல்லூரிகள் தெரிவிக்கின்றன.

 

இதேபோல்  செல்போன்களை பயன்படுத்தி தேர்வு அறைகளிலும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை தடுக்கும் பொருட்டு, ஒழுங்கு நடவடிக்கையாக தமிழ்நாட்டு அரசு கலை & அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கச் சொல்லி அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

 

இதுபோன்ற அறிவிப்பு வருவதற்கு முன்னரே பல கல்லூரிகள், குறிப்பாக பொறியியல் கல்லூரிகளும், ஏன் அண்ணா பல்கலைக் கழகம் கூட இதனை பின்பற்றியதும், ஆனால் பிறகு நாம் தற்போது வாழத் தொடங்கியுள்ள டிஜிட்டல் யுகத்தில் இந்த விதிகளை முழுமையாக பின்பற்றுவதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் காரணமாகவும் அந்த விதிகள் தளர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.