தந்தை வயதுடையவரை மணக்க விருப்பமில்லை: மணப்பெண் வாக்குமூலம்

Home > தமிழ் news
By |
தந்தை வயதுடையவரை மணக்க விருப்பமில்லை: மணப்பெண் வாக்குமூலம்

தந்தை வயதுடைய எம்.எல்.ஏவை மணக்க விரும்பாததால் வீட்டைவிட்டு வெளியேறியதாக, மணப்பெண் சந்தியா நீதிமன்ற நடுவரிடம் தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஈஸ்வரன் (43). சமீபத்தில் இவருக்கும்  சந்தியா (23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. செப்டம்பர் 12 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. 

 

இதனையொட்டி திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு உறவினர் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. திருமணத்தில் முதல்வர் பழனிச்சாமி,துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் கலந்து கொள்வதாக இருந்ததால் ஊரெங்கும் பிளெக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டன.

 

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மணமகள் சந்தியா காணாமல் போனார். இதனைத்தொடர்ந்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து தனிப்படை அமைத்தத்  தேடிய போலீசார் மணப்பெண் திருச்சி அருகேயுள்ள மணப்பாறையில் கண்டுபிடித்தனர். தொடர்ந்து கோபிச்செட்டிபாளையம் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

 

அப்போது நீதிமன்ற நடுவர் பாரதி பிரபாவிடம் மணப்பெண் சந்தியா, “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், மணமகன் எம்எல்ஏ மாப்பிள்ளை என்று என் வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள். எனக்கும் எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? அதனால் வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன்,” என்று தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற நடுவர் பாரதி பிரபா பெற்றோரை அழைத்து சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என, எச்சரித்து அனுப்பி வைத்தார். 

AIADMK, ERODE, MARRIAGE