ஆன்லைன் கேமுக்கு அடிமை.. கண்டித்த, பெற்றோர்-சகோதரியை கொலை செய்த இளைஞர்!
Home > News Shots > தமிழ் newsபாப்ஜி கேமுக்குத் தடை விதித்ததால் ஆத்திரத்தில் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை இளைஞர் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இதுதான், பப்ஜி PUBG(Player’s Unknown Battle Ground)விளையாட்டின் விதி.தற்போது இளைஞர்கள் பலரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மொபைலிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
இந்தநிலையில் அளவுக்கு அதிகமான மோகத்தால் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி தனது தாய்-தந்தை-சகோதரி மூவரையும் கொலை செய்து சிறைக்கு சென்றிருக்கிறார் 19 வயது சுராஜ் அலியாஸ் சர்ணம் வெர்மா.
டெல்லி பகுதியை சேர்ந்த சுராஜ் பப்ஜி கேம் விளையாடக்கூடாது என கண்டித்ததால் தனது பெற்றோர்,சகோதரியை கொலை செய்துவிட்டு வீட்டிற்கு திருடர்கள் வந்ததாக நாடகமாடினார். எனினும் போலீஸ் விசாரணையில் சுராஜின் குட்டு வெளிப்பட்டு விட்டது. தொடர்ந்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,'' இந்த விளையாட்டுக்கு அடிமையாகி தான் 12-ம் வகுப்பில் சுராஜ் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவரைக் கண்டித்த பெற்றோர்கள் டிப்ளமோ படிப்பில் சேர்த்து விட்டுள்ளனர். ஆனால் அங்கும் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்லாமல் சுராஜ் இருந்திருக்கிறார். மேலும் இதனை விளையாடுவதற்காக டெல்லி பகுதியில் அறை ஒன்றையும் வாடகைக்கு எடுத்து, அங்கு சென்று நண்பர்களுடன் விளையாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனைக் கண்டுபிடித்த அவரது சகோதரி தனது பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் சுராஜைக் கண்டித்துள்ளனர்.மேலும் அவரிடம் இருந்து மொபைல் போனையும் பிடுங்கி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுராஜ் தனது நண்பர்களுடன் இணைந்து பெற்றோரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்.கடந்த புதன் இரவு ஆயுதங்களுடன் வீட்டுக்கு வந்த சுராஜ், மறுநாள் அதிகாலை 3 மணியளவில் தனது பெற்றோர்,சகோதரி ஆகியோரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து தடயங்களை அழித்து விட்டு வீட்டுக்கு திருடன் வந்து விட்டதாக அக்கம்-பக்கம் வீட்டில் உள்ளவர்களிடம் நாடகமாடியிருக்கிறார். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தோம். அங்கு இருந்த அனைத்துப் பொருட்களும் உடைந்து கிடந்தன. திருடன் வீட்டுக்கு வந்தபோது சுராஜ் மட்டும் உயிர் தப்பியது எப்படி என்ற சந்தேகம் எழுந்தது.இதனையடுத்து சுராஜை விசாரித்ததில் உண்மைகள் வெளியானது. தற்போது அவரை சிறையில் அடைந்திருக்கிறோம்.
பெற்றோர்களின் இறுதிச்சடங்குகளை சுராஜ் செய்யக்கூடாது என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், இறுதிச்சடங்குகளையும் அவர்களே செய்து முடித்துள்ளனர்.சிறையில் சுராஜ் தன்னை சட்டத்தில் இருந்து காப்பாற்றும்படி மட்டுமே கேட்கிறாராம்,'' என தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு உயிரான பெற்றோர்களை ஒரு கேமிற்காக இளைஞர் கொலை செய்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்க வீட்ல வயசுப்பசங்க இருந்தா இந்த மாதிரி 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு அடிமையாகாம பார்த்துக்கங்க பெற்றோர்களே!