இன்ஸ்டாகிராம் காதலை எதிர்த்ததால், கூலிப்படை மூலம் கொலை செய்த மகள்!
Home > தமிழ் newsஇன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயைக் கொன்ற மகளின் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் , காக்களூரில் வசித்து வந்த திருமுருகநாதன் மற்றும் பானுமதி தம்பதியரின் மகள் தேவிப்பிரியா. அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வரும் தேவிப்பிரியாவின் வீட்டில் திடீரென அலறல் சத்தம் கேட்டபோது, அந்த வீட்டில் இருந்து ரத்தக்கறையோடு இரண்டு இளைஞர்கள் வெளியில் ஓடிக்கொண்டிருந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் பிடித்து அடித்து உதைத்து விசாரித்தபோது, அந்த இளைஞர்கள் தங்கள் நண்பன் சுரேஷ், ஆந்திராவில் பணிபுரிந்தபடி தேவிப்பிரியாவை இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்ததாகவும், அதற்கு இடைஞ்சலாக இருந்த, தேவிப்பிரியாவின் தாயாரான பானுமதியை கொலை செய்ய தேவிப்பிரியாவின் உதவியுடன் அனைவரும் திட்டமிட்டதாகவும் கூறியுள்ளனர்.
அதன்படி, தேவிப்பிரியாவின் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரத்தை அறிந்த தேவியின் தந்தை திருமுருகநாதன், தேவியின் காதலர் சுரேஷை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். நாளுக்கு நாள் இந்த காதல் விவகாரம் வீட்டில் சண்டையாக வலுத்ததை அடுத்து, வீட்டை விட்டு ஓடிவருவதென தேவிப்பிரியா சுரேஷுக்கு வாக்கு கொடுத்துள்ளார். அதற்காக தனது அக்கா சாமுண்டீஸ்வரியின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த நகையை எடுத்துக்கொண்டு தேவிப்பிரியா புறப்படத் தயாராகியுள்ளார்.
ஆனால் தேவிப்பிரியாவின் அம்மா பானுமதி அப்போது தேவிப்பிரியாவை தடுத்ததால், முன்னதாகவே தயாராக இருந்த சுரேஷின் நண்பர்கள் இருவரும், தேவிப்பிரியாவின் தெரு அருகே அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் இந்த சமயம் பார்த்து, தேவிப்பிரியாவின் வீட்டுக்குள் மளமளவென நுழைந்து பானுமதியை கொலை செய்துள்ளனர். இது எதுவும் அறியாததுபோல் நின்றிருந்த தேவிப்பிரியாவும், அவரது காதலரும், மற்ற இரு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் காதலுக்காக பெற்ற தாயை கொலை செய்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.