‘என் வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கம்தான்..ஆனால் முக்கியமானதல்ல’.. கோலியின் வைரல் பதில்!
Home > தமிழ் newsகிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு அங்கம்தானே தவிர, என்றேனும் ஒருநாள் அதில் இருந்து வெளிவந்து வாழ்க்கையை வாழவேண்டும் என்று தனது ஓய்வு பற்றிய கேள்விக்கு விராட் கோலி அளித்துள்ள வித்யாசமான பதில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அடிலெய்டில் தொடங்கி பெர்த், மெல்போர்ன், சிட்னி என்று சுற்றிச் சுற்றி ஆஸ்திரேலியாவில் விளையாண்ட இந்திய அணி, டெஸ்ட் தொடரிலும் ஒருநாள் தொடரிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை சுற்ற வைத்தது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 259-வது இன்னிங்ஸில் எடுத்த 10, 000 ரன்களை, 30 வயதான கோலி தனது 219 இன்னிங்ஸிலேயே எடுத்தது உள்ளிட்ட பல சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் நம்பர் ஒன் இந்திய வீரராக வலம் வருகிறார். சர்வதேச அரங்கில் சதமடித்த பட்டியலில் 100 சதங்கள் அடித்த சச்சின் முதலிடத்திலும், 71 சதங்கள் அடித்த ரிக்கி பாண்டிங் 2-வது இடத்திலும் இருக்க, 64 சதங்கள் அடித்து கோலி 3-வது இடத்தை மிகக் குறுகிய காலத்துக்குள் பிடித்துள்ளார்.
இதனையடுத்து விராட் கோலியின் தலைமைப் பண்பு சிறப்பானதாக அமைந்ததாகவும், அவரின் கள ஆக்ரோஷம் வெற்றிக்கு வழிவகுக்கும் அளவுக்கு ஆரோக்கியமான ஒன்றாக இருப்பதாகவும் பல கிரிக்கெட் பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டி பேசினர்.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த விராட் கோலி, ‘சுமார் 8 வருடங்களுக்கு பிறகான தனது ஓய்வுக்கு பின் தனது குடும்பத்துக்கு முன்னுரிமை அளித்து கவனிக்க உள்ளதாகவும், அப்போது குடும்ப வாழ்க்கையை விட தனக்கு கிரிக்கெட் பெரிதாக இருக்காது என்றும், கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு அங்கம்தானே தவிர, மிக முக்கியமான ஒன்றல்ல’ என்று கூறியுள்ளார். முன்னதாக தனது ஓய்வுக்கு பின் பேட்டையே தொடமாட்டேன் என்று கோலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.