பேஸ்புக்குடன் போட்டாபோட்டி.. 'மியூசிக்கலி'யைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
Home > தமிழ் newsபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் போலவே இசைக்கென சில பிரத்தியேகமான செயலிகள் இளைஞர்களிடையே உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் இசையை விரும்புவர்களுக்காக ஸ்மூல், கரோக்கி, மியூசிக்கலி போன்ற செயலிகள் இருக்கின்றன. அதாவது இசையை விரும்புகிறவர்கள், இசையை உருவாக்குகிறவர்கள், இசைப்பாடல்களைப் பயன்படுத்துபவர்கள் என மூன்று சாரரும் இந்த செயலிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதில் மியூசிக்கலி என்ற செயலியை உலகம் முழுவதும், சுமார் 10 கோடி பேருக்கும் மேல் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் திடீரென இந்த செயலிக்கு 'டிக் டொக்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக உருவான சீனாவின் பிட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டொக் செயலி உலகம் முழுவதும் சீனாவைத் தவிர்த்து 500 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இந்த செயலியுடன் தற்போது மியூசிக்கலி எனும் செயலியை 1 பில்லியன் டாலர்களை கொட்டிக்கொடுத்து வாங்கி தங்களது டிக்டொக் மென்பொருளுடன் பிட்டான்ஸ் நிறுவனம் இணைத்துள்ளது.
ஆனாலும் மியூசிக்கலியைப் பயன்படுத்தி வரும் பயனாளர்களின் விபரங்கள், பதிவுகள், வசதிகள் என எதையும் மாற்றாமல், அவர்களை சிரமத்துக்குள்ளாக்காமல் இதைச் செய்திருக்கிறது பிட்டான்ஸ் நிறுவனம். அதே சமயம் மியூசிக்கலியைப் போன்றே ஒரு செயலியை உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயன்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆகையால் பேஸ்புக்குடன் இந்த சீன நிறுவனம் போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.