ஸ்விகியில் 'ஆர்டர்' செய்த வாலிபருக்கு கிடைத்த அதிர்ச்சி!
Home > News Shots > தமிழ் newsஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த உணவில்,ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஸ்விகி ஆப் மூலம் சேலையூரில் உள்ள 'சாப் இன் ஸ்டிக்ஸ்' என்ற உணவகத்தில் சேஸ்வான் நூடுல்ஸை ஆர்டர் செய்துள்ளார்.பாதி சாப்பிட்ட பின்பு சாப்பாட்டு பார்சலை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அவர் ஆர்டர் செய்த உணவில் ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் ஒன்று இருந்திருக்கிறது.
இதுகுறித்து,அவர் ஆர்டர் செய்த உணவின் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாலமுருகன் தனது பதிவில் ''தான் “சாப் இன் ஸ்டிக்ஸ்” என்ற உணவகத்தில் சிக்கன் சேஸ்வான் நூடுல்ஸை ஸ்விகி ஆப் மூலம் ஆர்டர் செய்ததாகவும்,அதில் ரத்தக்கறை படித்த பேண்டேஜ் இருப்பதை கண்டு அதிர்ந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் பாதி சாப்பிட்ட பின்புதான் பேண்டேஜ் இருப்பதை கண்டதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக ஸ்விக்கியை தொடர்பு கொண்ட பாலமுருகன்,இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.ஸ்விக்கி தரப்பிலிருந்து இரண்டு நாளில் இதற்கு பதிலளிப்பதாக தகவல் வந்திருக்கிறது.மேலும் ஆர்டர் செய்த உணவகத்தை தொடர்பு கொண்ட பாலமுருகன்,நடந்த சம்பவம் குறித்து தெரிவித்திருக்கிறார்.அதற்கு ''பேக்கிங் செய்யும் நபருக்கு அடிபட்டு இருந்ததாகவும்,உணவு பார்சல் செய்யும்போது தவறுதலாக பேண்டேஜ் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இது போன்ற ஒரு சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அந்த உணவகம் தெரிவித்தாக அவர் தன்னுடைய பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.