எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த தற்காலிக தடை..உயர்நீதிமன்றம்!
Home > தமிழ் newsசென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி சாலை அமைப்பதற்கான திட்டம் தொடங்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த திட்டத்தை தொடங்கும் முன்னே ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தன. அதையடுத்து தமிழக அரசும் இந்த திட்டத்தினால் எந்தவித சிக்கலும் இல்லை, இந்த திட்டம் வளர்ச்சிக்கான திட்டம் என்று அறிவித்து வந்தது.
ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீது ஆர்வம் உடைய ’பூவுலகின் நண்பர்கள்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் இந்த பசுமை வழிச்சாலை திட்டம் நிறைய நிலங்களை கையகப்படுத்துவதாகவும், இது வளர்ச்சிக்கானதல்ல என்றும் வழக்கு தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து இதே திட்டத்திற்கு எதிராக 35 வழக்குகளும் சில பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. வெகு நாட்களுக்கு பிறகு இந்த வழக்கு முன்னாள் தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி அமைத்த சிறப்பு அமர்வின் மூலம் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில் 8 வழிச்சாலை தொடர்பான இந்த வழக்கில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், இந்த திட்டம் விளை நிலத்தை கையகப்படுத்துவதாகவும் அதனால் பொதுமக்கள் சிலர் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேற்படி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மறு உத்தரவு வரும் வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதோடு வழக்கை செப்டம்பர் இரண்டாம் வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.