கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி இரவு அண்ணாநகரில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் அமுதா(50) என்பவரிடம் சிகிச்சை பெறுவது போல் வந்த ஒரு நபர், டாக்டரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.

 

இதனை சற்றும் எதிர்பாராத அமுதா சத்தம் போட, அவ்வழியே வந்த சூர்யா(17) என்னும் சிறுவன் அந்த இளைஞனை தனி ஒருவனாக விரட்டிப் பிடித்து செயினை மீட்டார். இதற்காக சென்னை கமிஷனர் விஸ்வநாதன், சூர்யாவை நேரில் அழைத்து தனது பாராட்டைத் தெரிவித்தார்.

 

அப்போது அவரிடம் தனக்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி சூர்யா கோரிக்கை வைத்தார். இதனை நினைவில் வைத்து கமிஷனர் விஸ்வநாதன் டிவிஎஸ் நிறுவனத்திடம் சிபாரிசு செய்து, சூர்யாவுக்கு ஏசி மெக்கானிக்காக, வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

 

சூர்யாவுக்கான பணி நியமன ஆணையை கமிஷனர் நேரில் வழங்க வேண்டும் என டிவிஎஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தினரை நேரில் அழைத்து, தனது அலுவலகத்தில் வைத்து அவருக்கான பணி நியமன ஆணையை கமிஷனர் வழங்கினார்.

 

இதுகுறித்து சூர்யா,''ஷூ அணிந்து பணிக்கு செல்ல வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறியுள்ளது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான் மற்றவர்கள் ஷூ அணிந்து நல்ல உடையுடன் வேலைக்குச் செல்வதை ஏக்கத்துடன் பார்ப்பேன். நாம் இப்படிப் போக முடியுமா? படிக்காத நாம் எங்கே அப்படிப் போக முடியும் என என்னை நானே தேற்றிக்கொள்வேன், ஆனால், காவல் ஆணையர் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டதன் மூலம் எனது கனவை நிறைவேற்றி வைத்துள்ளார்,'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


 

BY MANJULA | JUL 5, 2018 5:49 PM #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS