காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கடந்த 2007- ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

 

இந்த வழக்கில் அனைத்து கட்ட விசாரணைகளும் நிறைவடைந்த பின்,உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்குவதாக அறிவித்தது.

 

மேலும், இதுவே காவிரி விவகாரம் தொடர்பான இறுதித்தீர்ப்பு எனவும் இதை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய இயலாது என்றும் தெரிவித்திருந்தது.இதுதவிர 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு விதித்திருந்தது.

 

ஆனால் 6 வாரகாலம் அவகாசம் முடிந்தும் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசின்மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

 

அதே சமயம், உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையின் விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்டும், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், காவிரி வரைவுத் திட்டத்தைத் தாக்கல்செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

 

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS