144 தடையை மீறி அதிக வாகனங்களில் சென்றதாக ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 9 தலைவர்கள் மீது, தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையசேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

 

இதற்கிடையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று (புதன்கிழமை)  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

 

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறி, அதிக வாகனங்களில் சென்றதாக ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல்ஹாசன், ஜி.கே.வாசன், டி.ராஜேந்தர், ரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS