'நான் இன்னும் யுனிவர்ஸ் பாஸ்’.. உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வுபெறும் அதிரடி பேட்ஸ்மேன்!

Home > தமிழ் news
By |

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர் கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் பலரிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நான் இன்னும் யுனிவர்ஸ் பாஸ்’.. உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வுபெறும் அதிரடி பேட்ஸ்மேன்!

விளையாடச் செல்லும் இடங்களில் எல்லாம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய கெய்ல், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பின்னிப் பெடலெடுத்தவர். இவரின் தனித்துவமான ஆட்டத்தைக் காண்பதற்காக தனித்துவமான கூட்டமே இருக்கும். மைதானத்தில் பேட்டை பிடித்து கெய்ல் ஆடத் தொடங்கினால், ஃபீல்டர்களுக்கு கேலரியில்தான் இடம் என்பது எழுதப்படாத விதி.

அனல் பறக்கும் அளவுக்கு அடித்து விளாசுவார். ஐபிஎல் என்று வந்தபோதெல்லாம் இன்னும் முழுமையாக ஃபார்ம் காட்டினார். இந்தியாவில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் இவருக்கென பிரத்தியேகமான ரசிகர் கூட்டம் உருவானதென்றால் மிகையல்ல. எந்த அளவுக்கு பந்தை அடித்து விளாசுவாரோ, அதற்கு நிகராய் சர்ச்சைகளை உருவாக்கிக் கொள்வதிலும் வல்லவரான இவரது சர்ச்சைகள் அந்த கிரிக்கெட் சீசனையே களைகட்டச் செய்துவிடுவன.

இப்படிப்பட்ட கிறிஸ் கெய்ல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். இதுவரை 284 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 49 அரைசதம் உட்பட 9727 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்கிற பெருமைக்குரியவர்.

இந்நிலையில்தான், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கெய்லின் இந்த ஓய்வுமுடிவை உறுதிப்படுத்தியுள்ளது.  ஆனால் வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகே ஓய்வு பெறப்போகும் கெய்ல் தனது இந்த ஓய்வு முடிவு குறித்து பேசும்போது, ‘இன்னும் நான் யுனிவர்ஸ் பாஸாகவே இருக்கிறேன். அது என்றைக்குமே மாறாதது. எனது கல்லறைக்கு போகும்போதும் கொண்டு செல்வேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும், அடுத்து வரும் உலகக்கோப்பைத் தொடர் தனக்கு கடைசித் தொடராக இருந்தாலும், அதன் பிறகேனும் இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்களின் பின்னால் இருந்து வேடிக்கை பார்க்கவிருப்பதாகவும் கூறியவர், தன் உடலும் இன்னும் கட்டுக்கோப்பான நிலையிலேயே இருக்கிறது என்றும், தான் இன்னும் சிக்ஸ்பேக்குக்காக உழைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ODI, CRICKET, CHRISGAYLE, RETIREMENT, WORLDCUP2019