பயணத்தின்போது உயிரிழந்த மூதாட்டியை ரோட்டோரத்தில் விட்டுச்சென்ற பேருந்து ஊழியர்கள்!
Home > தமிழ் newsபயணம் செய்த பேருந்திலேயே நெஞ்சு வலியால் உயிரிழந்த மூதாட்டியை மனிதாபிமானமின்றி சாலையில் இறக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செய்த வேலை தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில், இருந்து வேலூரின் புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தது ஒரு தனியார் பேருந்து. இதில் பயணித்துச் சென்ற மூதாட்டி ஒருவருக்கு சிலமணி நேரத்துக்குள்ளாகவே நெஞ்சுவலி உண்டாகியுள்ளது. திடீரென உண்டான நெஞ்சுவலியால் துடித்துள்ளார் அந்த மூதாட்டி.
பின்னர் அருகில் அமர்ந்திருந்த சக பயணிகளிடம் சிரமப்பட்டு, இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் பதறிப்போன அந்த சக பயணி உடனே பேருந்து ஊழியர்களான ஓட்டுநரிடமும் நடத்துநரிடமும் தகவல் தெரிவிப்பதற்கு முன்னதாகவே, அந்த மூதாட்டியோ பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மூதாட்டி மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய அந்த பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் வேலூர் ரோட்டில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில், உள்ள ஒரு சாலையில், அதிகாலை நேரத்தில் மூதாட்டியின் உடலை இறக்கி வைத்து, போர்த்திவிட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு பறந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் போலீஸாருக்கும் 108-க்கும் தகவல் அளித்துள்ளார். போலீஸார் விரைந்து வந்து விசாரித்ததில், அந்த மூதாட்டி செய்யாறு பகுதியைச் சேர்ந்த பூஷணம் என்பவர் என்றும், உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இவ்வாறு நிகழ்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. பின்னர் உறவினர்களிடம் மூதாட்டியின் சடலம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.
எனினும், இறந்து போன மூதாட்டியை இரக்கமற்ற முறையில் சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.