'துளை போட்டு வங்கிக்குள் இறங்கி கைவரிசையை காட்டிய கும்பல்’.. திருச்சி அருகே பரபரப்பு சம்பவம்!
Home > தமிழ் newsதிருச்சி அருகே வங்கியில் துளையிட்டு கோடிக்கணக்கான பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சமயபுரத்தில் உள்ள டோல்கேட்டுக்கு அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இந்த வங்கியில் சமயபுரத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது கணக்குகளை வைத்து வந்துள்ளனர். அவர்களில் பலர் நகைகளை அடமானம் வைத்துள்ளனர். சிலர் பாதுகாப்பு பெட்டகத்தில் பணத்தை போட்டு வைத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை குடியரசு தினம் என்பதால் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாள்கள் விடுமுறை இருந்துள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், வங்கியின் பின்பக்கம் உள்ள சுவரில் ட்ரில்லிங் மெஷின் மூலம் துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வங்கியிலிருந்து 5 லாக்கர்களை உடைத்து அதிலிருந்த பணத்தையும் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
விடுமுறை முடிந்து பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் உள்ளே வழக்கத்துக்கு மாறாக பொருள்கள் இடம் மாறியிருப்பதைப் பார்த்து பதற்றமாகியுள்ளனர். பின்னர் வங்கியின் பின்புற சுவரில் பெரிய துளை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனே லாக்கர் இருக்கும் இடத்துக்கு சென்று பார்க்கையில் லாக்கர்கள் உடைந்து இருப்பதும் அதிலிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போனதையும் கண்டுள்ளனர். உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 500 சவரன் நகை மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் தனி நபர்கள் உபயோகிக்கும் லாக்கர்களில் இருந்து மட்டும் கொள்ளை போயிருப்பதாகவும், மெயின் லாக்கரில் இருந்து கொள்ளை போகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை மெயின் லாக்கரில் கொள்ளையடிக்கப் பட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கில் பணம் பறிபோயிருக்கும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் பயன்படுத்திய ட்ரில்லிங் கருவி, சுத்தியல் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளதாகவும், கொள்ளை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.