பலியான வீரர்களின் குழந்தைகளுக்காக பெண் கலெக்டர் எடுத்த முக்கிய முடிவு!
Home > தமிழ் newsஅண்மையில் நடந்த புல்வாமா தாக்குதல் இந்தியாவையே பெருத்த சோகத்தில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த தாக்குதல் சம்பவம் விமர்சிக்கவும் கண்டிக்கவும் பட்டது. தமிழகத்தை பொருத்தவரை ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கூட கடுமையான கண்டனங்களை காட்டமாகவே வெளிப்படுத்தினர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், சிஆர்பிஎப் வீரர்களின் இழப்பை எப்படியும் ஈடு செய்ய முடியாது என்பதால் அவர்களின் குழந்தைகளை தனது, சர்வதேச சேவாக் பள்ளியில் படிக்க வைக்கும் பொறுப்பினை ஏற்பதாக அறிவித்தார். மரணமடைந்தவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், நடந்து முடிந்த இந்த தீவிரவாதத் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களின் பெண் குழந்தைகளை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகரி ஒருவர் தத்தெடுத்திருப்பது பலரையும் நெகிழவைத்துள்ளது. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் பீகாரை சேர்ந்த ரத்தன் குமார் தாகூர் மற்றும் சஞ்சய் குமார் சிங் என்கிற இரண்டு வீரர்களும் உள்ளனர்.
இவர்களின் 2 பெண் குழந்தைகளை, பீகாரின் ஷேக்புரா மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியான இனாயத் கான் எனும் பெண்மணி, தத்தெடுத்துள்ளதோடு, அந்த குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கான வங்கிக் கணக்கினையும் தொடங்கி வைத்துள்ளார். அதில் யார் வேண்டுமானாலும் நிதி உதவிகள் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மார்ச் 10-ஆம் தேதி வரை இந்த சேமிப்புக்கணக்கில் சேரும் பணத்தொகை இருவருக்கும் அளிக்கப்படவிருப்பதாகவும், தனது 2 நாட்களுக்கான ஊதியத்தை அளித்துள்ளதாகவும், அம்மாவட்ட அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் இனாயத் கான் குறிப்பிட்டுள்ளார்.