ஜூன் 17-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில், சமூக மேன்மைக்கு பாடுபட்ட நான்கு உயரிய மனிதர்களுக்கு 'பிஹைண்ட்வுட்ஸ்' சார்பில் எமிநென்ஸ் விருதுகள் வழங்கப்பட்டது.

 

விழாவில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த உண்மையான ஹீரோ டிஜிபி  ஜாங்கிட் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. வெள்ளை ரவி,பங்க் குமார் போன்ற பிரபல ரவுடிகளை என்கவுண்டரில் தீர்த்துக்கட்டிய பெருமை இவரையே சேரும்.

 

பவாரியா என்ற மோசமான கொள்ளைக்கூட்டம் தமிழக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. உச்சகட்டமாக இரண்டு தமிழக அரசியல்வாதிகளை அவர்கள் வீட்டிலேயே வைத்து இக்கூட்டம் கொலை செய்தது. ஜாங்கிட் தலைமையிலான குழுவினர் அக்கூட்டத்தில் சிலரை என்கவுண்டர் செய்தும், சிலரைக்கைது செய்தும் பவாரியா குழுவின் அட்டகாசத்துக்கு முடிவுரை எழுதினர்.

 

மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 90-களில் நடைபெற்ற வகுப்புவாத கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவந்த திரு.ஜாங்கிட் அவர்களைப் பாராட்டும் விதமாக 'தி பார்க் குரூப் ஃஆப் இன்ஸ்ட்டியூஷன்ஸ் வழங்கும், 'பிஹைண்ட்வுட்ஸ் எமிநென்ஸ் இன் சர்வீஸ் டூ மேன்கைன்ட்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் வழங்கினர்.

 

விழாவில் திரு.ஜாங்கிட் அவர்கள் பேசும்போது, "இந்த வாய்ப்பை அளித்த பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. இந்த பெருமை அனைத்தும் போலீஸ் கான்ஸ்டபிள்கள், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் மற்றும் வலுவான குழுவினை அமைத்தவர்கள் ஆகியோரையே சேரும். அனைவரின் ஒற்றுமையால் தான் இது சாத்தியமானது.25 வருட போலீஸ் வாழ்க்கையை அளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. ஏராளமான உண்மைக்கதைகள் உள்ளன. இந்த கதையில் சிறப்பாக நடித்த கார்த்திக்கு நன்றி. மேலும் இயக்குநர் வினோத் அவர்களுக்கும் நன்றி,''என்றார்.

 

விழாவில் திரு.சண்முகம், திருமதி.மலர்க்கொடி தனசேகரன் மற்றும் திரு. பாலம் கல்யாணசுந்தரம் ஆகியோருக்கும் எமிநென்ஸ் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

BY MANJULA | JUN 21, 2018 4:02 PM #BEHINDWOODSEXCLUSIVE #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS