மாணவர்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட பள்ளி முதல்வர்!
Home > தமிழ் newsகர்நாடக மாநிலம் பெங்களூரில்,மாணவர்கள் முன்னிலையில் பள்ளியின் முதல்வரை கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தாசரஹள்ளியில் ஹவனூர் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியை ரங்கநாத் என்பவர் நடத்தி வருவதோடு அவரே பள்ளியின் முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார்.ஞாயிற்றுக்கிழமைகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பது ரங்கநாதின் வழக்கம்.அவ்வாறு நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து கொண்டிருந்தார்.அந்த வகுப்பில் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது, 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பள்ளிக்குள் புகுந்தது.அந்த கும்பல் மாணவர்கள் கண் முன்பே ரங்கநாத்தை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த படுகொலையை நடத்திவிட்டு அந்த கும்பலானது தப்பியோடியது.முதல்வர் கொலை செய்யப்பட்டதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இந்த படுகொலை குறித்து தகவலறிந்த காவல்துறையினர் குற்றவாளியை தேடும் பணியில் இறங்கினார்கள்.கொலையாளி ஒருவன் மகாலட்சுமி லேஅவுட்டுக்கு அருகில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் குற்றவாளியை துரத்தி சென்று காலில் சுட்டுப் பிடித்தனர்.சுடப்பட்ட குற்றவாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எதற்காக பள்ளி முதல்வர் கொலை செய்யப்பட்டார் என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.