‘அதெல்லாம் நீங்கதான் கொண்டுவரனும்’.. டாக்டரின் அலட்சியத்தால் குழந்தை பலி!
Home > News Shots > தமிழ் news'உங்க குழந்தையை காப்பாற்ற, நீங்கள்தான் வெண்டிலேட்டர் எடுத்து வர வேண்டும்' என அலட்சியமாக பெற்றோரிடம் விவாதித்து பெண் குழந்தை ஒன்று தன் உயிரை இழந்ததற்கு காரணமாக இருந்த டாக்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உடம்பில் வெந்நீர் பட்டதை அடுத்து 70 சதவீதம் காயத்துடன் ஒன்றரை வயது பெண் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அக்குழந்தையின் பெற்றோர் விரைந்துள்ளனர்.
அப்போது அத்தியாவசிய தேவையாக வெண்டிலேட்டர் தேவைப்பட, டாக்டர் ஜோதி ராவுத் என்பவரை அந்த குழந்தையின் பெற்றோர் அணுகியுள்ளனர். அதற்கு டாக்டர் ராவுத் உங்கள் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள்தான் வெண்டிலேட்டரை கொண்டு வர வேண்டும் என அலட்சியமாக பதில் கூறியதோடு, வெண்டிலேட்டருக்கு 1 கோடி ரூபாய் வேண்டும் என்றும் அந்த பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே உரிய நேரத்தில் வெண்டிலேட்டர் கிடைக்காததால் அந்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனையடுத்து மேற்கண்ட சம்பவத்துக்கு காரணமான டாக்டர் ராவுத் மருத்துவமனையில் அந்த குழந்தையின் பெற்றோருடன் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத்தொடர்ந்து அலட்சியத்தின் காரணமாக குழந்தையின் உயிரைப் பறித்த டாக்டர் ராவுத்தை குறிப்பிட்ட அந்த மருத்துவ நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படும் நிலையில், குழந்தை உயிரிழந்த அந்த மருத்துவமனையில் 17 வெண்டிலேட்டர்கள் இருக்கின்றன என அந்த மருத்துவமனையின் டீன் தகவல் சொல்லியிருப்பது மேலும் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.