சாலையில் கிடந்த 80ஆயிரம்...போலீஸிடம் ஒப்படைத்த ஆட்டோக்காரரின் நேர்மை!

Home > தமிழ் news
By |
சாலையில் கிடந்த 80ஆயிரம்...போலீஸிடம் ஒப்படைத்த ஆட்டோக்காரரின் நேர்மை!

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார்  மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

 

மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் செல்லத்துரை (49).  ஆட்டோ ஓட்டுநரான இவர் வியாழக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு சமயநல்லூரில் இருந்து பரவை சென்றுள்ளார்.

 

ஊர்மெச்சிகுளம் அண்ணாநகர் அருகே சென்றபோது சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. ஆட்டோவை நிறுத்தி பையை எடுத்த செல்லத்துரை, பையை திறந்து பார்த்தபோது அதில் ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதையடுத்து சக ஆட்டோ ஓட்டுநர்களுடன் சமயநல்லூர் காவல் நிலையத்துக்குச்சென்ற செல்லத்துரை பணப்பையை போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் பணத்தை எண்ணிப் பார்த்ததில்ரூ.80 ஆயிரம் இருந்துள்ளது.

 

இந்த நிலையில் பணம் இருந்த பையைத் தவறவிட்டவர்கள் பையைத் தேடி வந்துள்ளனர். பை கிடைக்காத நிலையில் அவர்கள் சமயநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் செல்லத்துரை கொண்டு வந்த பையைக் காண்பித்து இது அவர்களது பையா என விசாரித்துள்ளனர்.

 

இதில், பணத்தைத் தவறவிட்டவர்கள் சமயநல்லூர் விஎம்டி நகரைச் சேர்ந்த ஜீவானந்தமும், அவரது மனைவி மாயாராணி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் முறைப்படி புகார் எழுதிப் பெற்றுக் கொண்டு பணப்பையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.80 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைத்த செல்லத்துரையின் நேர்மையை சமயநல்லூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மோகன்குமார், மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

POLICE, AUTO DRIVER