பூர்வகுடியை அந்நியப்படுத்துகிறதா ’தேசிய கீதம்’? சிறுமியின் கருத்தால் எழும் விவாதம்!

Home > தமிழ் news
By |
பூர்வகுடியை அந்நியப்படுத்துகிறதா ’தேசிய கீதம்’? சிறுமியின் கருத்தால் எழும் விவாதம்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ளது கென்மோர் நகரம். இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படிப்பவர் ஹர்பெர் நீல்சென். இவர் கடந்த செப்டம்பர் இரண்டாம் வார இறுதியில் தன் பள்ளியில் ஒலித்த தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது, அந்த சமயம் சிறு அளவில் சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் இந்த செய்தி கொரியர் மெயில் பத்திரிகையில் வெளிவந்த பிறகு சர்வதேச விவாதப்பொருளாக இந்த சம்பவம் மாறியுள்ளது. தேசிய கடமையாற்றுதல், தேசியத்தை பின்பற்றத் தவறுதல், தேசியத்தை ஒப்புக்கொள்ளாமை, பன்மை தேசிய நம்பிக்கையின்மை,  தேசிய இன எழுச்சி, உள்நாட்டு பிரச்சாரம், கட்டமைக்கப்படும் குடியரசுகளுக்கான குறியீடா தேசிய கீதம் என்கிற பல்வேறு வகையிலான தலைப்புகள் பேசுபொருள்களாக உலக அரங்குகளில் பேசப்பட்டு வருகின்றன.


இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு முக்கியாம்சம் நிறைந்த இடங்களில் தேசிய கீதங்களை ஒலிபரப்புவதற்கு பூர்வகுடிகளின் எதிர்ப்புகளும், புலம் பெயர்ந்தோரின் ஆதரவுகளும் கருத்துக்களாகவும் போராட்டங்களாகவும் வெளிவந்தன. சிலர் ஒத்துழையாமைகளிலும் ஈடுபட்டனர். முன்னதால 2008-ல் பிரதமராக கெவின் ரூட் இருந்தபோது,  நாடாளுமன்றத்தில் ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் உதாசீனப்படுத்தப்பட்டதாக, வருத்தம் தெரிவித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.


எனினும் தேசியவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அதுபோன்ற சமயங்களில் எழுந்து நிற்க வேண்டிய பாதுகாப்பு சுதந்திரமற்ற சூழல் உண்டானதாகவும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் தேசிய விரோதப் போக்குகளை எந்நாட்டு அரசும் ஆதரிக்க முடியாது என்பதுபோலவே, தனிமனித சுதந்திரத்தையும் ஒடுக்குவதும் ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு என்பதையும் பலர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான் ஹர்பெர் நீல்சென், இப்படி ஒரு சர்ச்சைக்குரிய காரியத்தை செய்ததோடு, ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தில் வரும் For we are young and free என்கிற வரிகள் உட்பட பல வரிகள் அந்நாட்டு பூர்வகுடிகளை அந்நியப்படுத்தி, அந்நாட்டுக்குள் புலம் பெயர்ந்து வந்த வெள்ளைக் காரர்களை  மேன்மைப்படுத்தி கூறுவதாக தன் கருத்தையும் தெரிவித்திருந்தார்.  உண்மையில் பெற்றோரின் தூண்டுதலில் இவ்வாறு பேசப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தை, ‘என் மகள் வன்முறை செய்பவரை போன்று எதிர்க்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது. உண்மையில் அவள் தன் புரிதலுக்குட்பட்ட,  ஒரு மாற்றுக் கருத்தினை சரி நிகர் பார்க்காமல் பொதுத்தளத்தில் வைக்கும் துணிச்சலை எண்ணி மகிழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


ஆஸ்திரேலிய எழுத்தாளர் அனிதா ஹெய்ஸ் உட்பட பலர், ஹர்பெரின் இந்த கருத்துக்கு #isitwithharper என்கிற ஹேஷ்டேகில் பலர் ஆதரவளிக்க, அதே நேரம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்ததோடு, ஹெர்பெரை பள்ளியில் இருந்து நீக்கவும் வலியுறுத்தி வந்தனர். இதேபோல் சிறுமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த  குவின்ஸ்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பௌலின் ஹன்சன், ‘ஒரு நாட்டுக்கு சில விதிகள் இருக்கும். தேசிய கீதம் என்பது ஒரு தேசத்துக்கும் குடிமகனுக்குமான அடையாளம். பூர்வகுடி மக்கள் அந்நியப்படுவதை விடவும் பிரிவினை அற்ற சமத்துவம் முக்கியம். வரலாறு தெரியாத இந்த சிறுமிக்கு வந்த இந்த உணர்வை மூளைச் சலவை செய்யப்பட்ட இந்த சிறுமையை நானாக இருந்தால் தண்டித்திருப்பேன். பூர்வகுடியை சேர்ந்த விளையாட்டுவீரர்கள்தான் பெரும்பாலும் ஒரு நாட்டின் தேசிய கொடி ஏந்தி தேசிய கீதத்தை பாடுகின்றனர்’ என்று கூறினார். இதேபோல் அந்நாட்டு கல்வி அமைச்சர் சிறுமியின் பெற்றோர்கள் இதற்கு வெட்கப்பட வேண்டும் என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில்தான் பூர்வகுடிமக்கள் பற்றிய விவாதப்பொருளாக இச்சம்பவம் உலக அரங்கில் மாறியுள்ளது.

AUSTRALIA, HERPERNIELSEN, NATIONALANTHAM, NATIONALANTHEMCONTROVERSY