பாஜகவுக்கு 5.. பாமகவுக்கு 7.. அதிமுகவின் மெகா கூட்டணி!

Home > தமிழ் news
By |

நாடாளுமன்ற தேர்தல் சீசன் பரபரப்பாக சூடு பிடித்து வரும் நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், சென்னை வருகை தந்ததோடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்துள்ளார்.

பாஜகவுக்கு 5.. பாமகவுக்கு 7.. அதிமுகவின் மெகா கூட்டணி!

முற்பகலில், சென்னை கிரௌன் பிளாஸாவுக்கு வருகை தந்த அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவரும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மேலும் அதிமுகவுடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

அந்த தொகுதிகளின் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொன்ன பாமக நிறுவனர் ராமதாஸ், 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று பேசினார். இதனிடையே தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சென்னைக்கு வருகை தந்ததோடு, முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவருடனும், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனான அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

உடன் தமிழக பாஜக மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ஏற்கனவே அதிமுக அமைச்சர் தங்கமணியுடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுக-பாஜக கூட்டணிக்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  தவிர அதிமுக-பாஜக மெகா கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

BJP, AIADMK, LOKSABHAELECTIONS2019, PMK