ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு BE பட்டதாரியை விட சம்பளம் அதிகம்: 'ஆசிரியர் போராட்டம்' பற்றி கஸ்தூரி!

Home > தமிழ் news
By |

நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி அவ்வப்போது நாட்டு நடப்புகளைப் பற்றிய தன் கருத்துக்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கின் மூலம் தட்டிவிடுவது வழக்கம். அந்த வகையில் ஆசிரியர்கள் போராட்டம் பற்றிய அவரது கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன.

ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு BE பட்டதாரியை விட சம்பளம் அதிகம்: 'ஆசிரியர் போராட்டம்' பற்றி கஸ்தூரி!

அதன்படி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம் வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம் , அரசு விருதுகள், பயணத்தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர் வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்கு பணம், இப்படி அரசு கல்வித் துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சினிமாவில் நடித்தவர்கள் கூட உண்டு என்று குறிப்பிட்டுள்ள கஸ்தூரி, ‘தனியார் துறையில் நித்யகண்டம், பூர்ணாயுசு என்னும்படியாய் நாக்கு தள்ள வேலை செய்துக்கொண்டு அரசு வேலைக்காரர்களை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்க்கும் ஏமாளிகளுக்கு பெரிய சம்பளம், நிரந்தர வேலை, வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் இதெல்லாம் கனவில் கூட கிட்டாது. ஆனால் அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பார்க்கும் பொழுது பொறாமையும் ஆற்றாமையும் வருமே தவிர நியாயமென்று தோன்றுமா? என்று கேட்டவர், ஜாக்டோ ஜியோ ஆளும் அரசுக்கு எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுவதாகவும் கூறியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ கேட்பது நியாயம்தான்; ஆனால் குறைந்தது  ரூ.35 ஆயிரம், அதிகபட்சம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் கல்வி தெய்வங்கள் மாணவர்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் விட்டு கொடுத்தால் என்ன ? என்று கேட்டுள்ளவர், வேலை நிறுத்தம் செய்வதால் யாருக்கும் லாபமில்லை, அனைவருக்கும் பாதிப்பு மட்டுமே. ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லவில்லையென்றால் அரசு கஜானா நிரம்பிவிடுமா என்ன? என்றும் அதிரடியாக் கேட்டுள்ளார்.

மேலும், ‘ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு Tidel Park-ல் வேலை செய்யும் BE படித்த பொறியியல் பட்டதாரியைவிட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்? கூசாம போராட்டம் மட்டும் பண்ண தோணுது’என்று பேசியுள்ளவர், ஓய்வூதிய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் தனக்கு எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்றும் கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த கருத்துக்களுக்கு பல்வேறு விதமான எதிர்ப்பு மற்றும் ஆதரவு கருத்துக்கள் உருவாகியுள்ளன.

TEACHERSSTRIKE, KASTURI, CONTROVERSY