தூத்துக்குடிஉயில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையசேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.

 

இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தனது கண்டனத்தினை மிக காட்டமாகப் பதிவு செய்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிற இழப்புகளும் தொடர்ந்து ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது. பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவது ஒன்றுதான் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்களே மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.


பல்வேறு அத்துமீறல்களை செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்? சின்ன குழந்தைகள்கூட ‘ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்’ என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூட போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது.

 

நான் படப்பிடிப்பிற்குப் பல முறை தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!

 

2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

 

அரசு என்ன சொல்கிறது? ‘‘வேலைவாய்ப்பு தருகிறோம்” என்கிறது. ‘‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம். உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்” என்று மக்கள் சொல்லும்போது, “உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்” என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது. அப்படியென்றால், யாருடைய வாழ்வாதாரத்தை அடகு வைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?

 

ஒரு பிரச்னையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணைகொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத்தைக் குலைக்கின்றன.

 

வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம். ‘இதை மக்களின் நலனுக்காகச் செய்கிறோம்’ என்பது சாத்தான் ஓதும் வேதம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது,'' என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS