மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது, பி.எஸ்.என்.எல் அதிவேக இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் மாறன் சகோதரர்கள் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவிப்பதாக அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்களை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என அறிவித்தது. மேலும் இந்த வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
முன்னதாக சிபிஐ போலீசார் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், சென்னை பி.எஸ்.என்.எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப்பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன் மற்றும் எலெக்ட்ரீஷியன் ரவி ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.