BGM Biggest icon tamil cinema BNS Banner

யார் இந்த அமுதா ஐ.ஏ.எஸ் ?

Home > தமிழ் news
By |
யார் இந்த அமுதா ஐ.ஏ.எஸ் ?

கலைஞர் கருணாநிதியின் இறுதி சடங்குகளில் ஸ்லிங் பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு வேகமாக அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டு பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த அமுதாவை பார்த்தவர்கள் ஏதோ இவர் கலைஞரின் உறவுக்காரப் பெண் என எண்ணி இருப்பார்கள். ஆனால் அவர் கலைஞரின் உறவுக்கார பெண்ணல்ல,அவர்தான் ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவி வகித்துவரும் அமுதா.

 

1970-ம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர்  மதுரையில் இளநிலை விவசாயம் முடித்த கையோடு மத்திய ஆட்சி பணி தேர்வை எழுதி  1992-ம் ஆண்டு ஐபிஎஸ் எனப்படும் இந்திய காவல் பணியில்  முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார்.எனினும் அடுத்தகட்டமாக மீண்டும் தேர்வு எழுதி அதிலும் முதல் முயற்சியிலேயே வென்று, 1994-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றார். தான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம்  பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் பல சீர்திருத்த முயற்சிகளை முன்னெடுத்தவர் அமுதா.

 

தருமபுரியில் இவர் மாவட்ட ஆட்சியாளராக இருந்த போது பெண்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை கொண்டுவந்தார்.குறிப்பாக குழந்தைத்திருமணம்,பெண்சிசு கொலை போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி பல குடும்பங்களை அவற்றிலிருந்து மீட்டு எடுத்தார். இவருடைய துணிச்சலுக்கு சரியான எடுத்துக்காட்டு ஒன்றை சொல்லலாம்.

 

1998-ம் ஆண்டு செங்கல்பட்டில் துணை ஆட்சியராக பணிபுரிந்த போது ஆக்கிரமிப்புகளால் செங்கல்பட்டு மார்க்கெட் பகுதி திணறியது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அமுதா முடிவு செய்தார். பதிலுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றவிட மாட்டோம் என, அரசியல்வாதிகள் கைகோத்து நின்றார்கள். குறிப்பாக செங்கல்பட்டில் ரொட்டிக்கடை சேகர் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடைய தம்பி குரங்கு குமார், நகர்மன்ற துணைத்தலைவராக பதவி வகித்தார்.அவர்களைப் பார்த்து அதிகாரிகள் அஞ்சிய காலம் அது. குரங்கு குமாரைக்  கண்டவுடன் ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுநர் கீழே இறங்கிவிட்டார்.உடனே,ஜேசிபி-யில் ஏறிய அமுதா ஆக்கிரமிப்புக் கட்டடங்களை தரைமட்டம் ஆக்கினார்.

 

சென்னை மழை வெள்ளத்தின் போது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட  அமுதா,தனது  அதிரடி நடவடிக்கைகள் மூலம் தாம்பரத்தில் அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும்  மீறி பல ஆக்கிரமிப்புகளை அகற்றி தாம்பரத்தை மீட்டெடுத்தார்.யாருக்கும் வளைந்து கொடுக்காத அமுதா தமிழகத்தின் முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர் என்பது சிறப்பம்சமாகும். மேலும் தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளில் அமுதாவும் ஒருவர்.

 

தற்போது சென்னை உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக பதவி வகித்து வரும் அமுதாவிடம் நேற்று காலை 8 மணியளவில் கருணாநிதியின் இறுதிச்சடங்கை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. உடனே அண்ணா நினைவிடத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டார்.மேலும் கலைஞர் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு உள்ள அரசு மரியாதை மற்றும் மரபுகளையும் கலைஞரின் குடும்பத்திற்கு எடுத்து கூறி அவர்களது எண்ணங்களையும் புரிந்து, மிக நேர்த்தியாக அதையும் சிறப்பாக செய்து முடித்ததால்  தனக்கே உரிய பாணியில்  மிளிர்ந்து நிற்கிறார் அமுதா ஐ.ஏ.எஸ்.