'கொலை செய்யப்பட்ட நாய் உயிருடன் வந்ததால்'.. பாலியல் குற்றவாளிக்கு தண்டனை ரத்து!

Home > தமிழ் news
By |
'கொலை செய்யப்பட்ட நாய் உயிருடன் வந்ததால்'.. பாலியல் குற்றவாளிக்கு தண்டனை ரத்து!

அமெரிக்காவில்  ஜோஸுவா ஹார்னெர் என்பவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக வழக்கில் அவர் கொன்றதாக சொல்லப்பட்ட நாய் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டது.

 

அமெரிக்காவின் ஓரிகானை சேர்ந்தவர் ஜோஸுவா ஹார்னெர்.42 வயதான இவர் மீது குழந்தையிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு  குற்றம்சாட்டப்பட்டு அது உண்மை என நிரூபிக்கப்பட்டது.தான் செய்த குற்றத்தை வெளியில் சொல்லாமல் தன்னை தடுப்பதற்காக ஹார்னெர் தன் கண்ணெதிரே லாப்ரடார் ரக நாயை சுட்டுக்கொன்றதாக இந்த புகாரை எழுப்பிய பெண் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை ஆய்வு செய்த 'ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்' என்னும் குழுவை சேர்ந்தோர் அந்த நாய் வேறொரு வீட்டில் இருந்ததை கண்டறிந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது சரியான  தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், தாங்கள் இந்த வழக்கு சார்ந்த ஆதாரங்களை ஆய்விற்கு உட்படுத்தியபோது அவை "பலத்த சந்தேகத்தை" ஏற்படுத்தியதாகவும் அரசு சாரா சட்ட உதவி அமைப்பொன்று தெரிவித்தது.

 

மேலும் அந்த நாயின் இருப்பிடத்தை கண்டறிவதன் மூலம் இந்த வழக்கின் உண்மை நிலையை அறியும் சூழ்நிலை உருவானது. ஏனெனில், குற்றஞ்சாட்டப்பட்ட ஹார்னெர், தான் அந்த நாயை சுட்டுக்கொல்லவில்லை எனவும், அதை நிரூபிப்பதன் மூலம் புகாரளித்தவரின் கூற்று பொய்யானது என்று நிறுவ முடியுமென்றும் அவர் கூறியிருந்தார்.இறுதியாக தீவிர முயற்சிக்கு பிறகு அந்த லாப்ரடார் நாயை அம்மாநிலத்தின் கடற்கரையோர பகுதியில் கண்டறிந்தனர்.

 

இந்நிலையில் அந்த நாயின் தனித்துவமான தோற்றம், மற்ற ஆதாரங்களை வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நாய்தான் இது என்பது உறுதிசெய்யப்பட்டது."லூசி என்றழைக்கப்பட்ட அந்த நாய் சுடப்படவில்லை. லூசி உயிருடன் நல்ல நிலையில் இருக்கிறது" என்று மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான மறுவிசாரணை ரத்து செய்யப்பட்டதோடு ஹார்னெர் தனது மனைவியுடன் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.