ஒரு குழந்தையை காப்பாற்ற..330 கி.மீ. பறந்த 30 ஆம்புலன்ஸ்கள்.. வாக்கிடாக்கியான வாட்ஸாப்!
Home > தமிழ் newsகடந்த சனிக்கிழமை இரவு பிரசவ வலியால் திருச்சி கிருஷ்ணா மருத்துவமனையில் கிருஷ்ணவேணி அனுமதிக்கப்பட்டார். அவருடைய கணவர் குணாளன் உடன் இருந்துள்ளார். அடுத்த நாளான ஞாயிறு அன்று இந்த தம்பதியர்களுக்கு பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறியதை அடுத்து வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும், சிகிச்சை அளிப்பது சிரமமானதால் குழந்தையை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட முடிவெடுத்துள்ளனர். ஆனால் பிறந்த குழந்தையினை அதுவும் மூச்சுவிட சிரமப்படும் சிசுவைனை 330 கி.மீ கடந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வது அத்தனை எளிதான, பாதுகாப்பான காரியமும் அல்ல என்று உணர்ந்த மருத்துவர்கள், கால் ஈஸி என்கிற அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் சர்வீஸ் அமைப்பை நடத்தும், மாநில ஆம்புலன்ஸ் சங்க துணைத் தலைவர் இலியாஸ் என்பவரை தொடர்பு கொள்கின்றனர்.
அவர் உடனடியாக தன் வாட்ஸாப்பில் தட்டி, மணப்பாறை ஸ்ரீதரனை பிடிக்கிறார். குழந்தையை அலுங்காமல் குலுங்காமல் அழைத்துச் செல்லும் அதிநவீன ஆம்புலன்ஸ்தான் ஸ்ரீதரனுடையது. குணாளன் ஏறிக்கொண்டார். ஆனால் 330 கி.மீ தாண்டி சென்னைக்குள் நுழைந்து உள்பகுதிக்குள் செல்வது அத்தனை சுலபமா என்ன? மாலை 4.10 மணிக்கு புறப்படும் ஆம்புலன்ஸ் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்லவே பீக்-ஹவர்ஸில் 4 மணி நேரம் ஆகுமே? நம்மைப் போல் இந்த இவர்கள் யோசிக்கவில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று வண்டியை செலுத்த, அங்கிருந்து அனைத்து ஆம்புலன்ஸ் டிரைவர்களின் வாட்ஸாப் குழமத்தையும் இலியாஸ் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். தகவலை ஆடியோவாக பதிவிடுகிறார். அனைவரும் அறிகின்றனர். அதன் பிறகு சினிமாவில் கூட நிகழாததை சாதித்துக் காட்டி மாஸ் பண்ணியிருக்கிறார்கள்.
திருச்சி-சென்னை நெடுஞ்சாலை 45 ஆம்புலன்ஸ்கள் ஒரு நேர்க்கோட்டுக்கு திருப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆம்புலன்ஸும் தனக்கான எல்லையைத் தேர்வு செய்து அதுவரை பத்திரமாக வரும் குழந்தை இருக்கும் ஆம்புலன்ஸை அடுத்த ஆம்புலன்ஸ்கள் இருக்கும் இடத்துக்கு சாலையை க்ளியர் செய்து, கொண்டு சென்று சேர்க்க உதவுகின்றன. ‘உ உ வான்.. உ உ வான்’ என்று சைரனை அலறவிட்டபடி 100 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்ரீதரனின் ஆம்புலன்ஸ் குழந்தையை வெண்டிலேட்டர் உதவியுடன் அருகில் குணாளனை அமர்த்தியபடி அழைத்துக்கொண்டு வருகிறது. ஸ்ரீதரனின் ஆம்புலன்ஸுக்கு முன்னால் 4 ஆம்புலன்ஸ்கள் வந்தபடி சாலையை நெறிப்படுத்தி வழியை உருவாக்கிக்கொண்டே வருகின்றன. இடையே கண்விழித்து குழந்தையைத் தேடி கணவருக்கு கிருஷ்ணவேணியை குணாளன் போனில் பேசியபடி வேறு மருத்துவமனையில் இருப்பதாக சமாளித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே, திட்டக்குடி கூட்டுச்சாலையில், அந்த 4 ஆம்புலன்ஸ்களும் தங்கள் சேவைகளை நிறுத்திக்கொள்ள, வாட்ஸாப்பின் உதவியுடன் ஏற்கனவே தயாராக இருந்த 2 ஆம்புலன்ஸ்கள் தொழுதூரில் இணைகின்றன. இதற்கிடையில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த 2 ஆம்புலன்ஸ்கள் தொழுதூர் ஆம்புலன்ஸ்களிடம் இருந்து ஸ்ரீதரனின் ஆம்புலன்ஸை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து வழிநடத்த, தொழுதூர் ஆம்புலன்ஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. குழந்தையை ஏற்றிக்கொண்டு வரும் ஆம்புலன்ஸ் விழுப்புரத்தை அடைந்ததும் விழுப்புரத்தில் தயாராய் இருந்த 5 ஆம்புலன்ஸ் இணைய மொத்தம் 7 ஆம்புலன்ஸ் வழிநடத்தி 100 கி.மீ வேகத்தில் நிறுத்தாமல் திண்டிவனம் வரை செல்ல, அதற்குள் செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் வந்து காத்திருந்த 3 ஆம்புலன்ஸ்கள் திண்டிவனத்தில் இருந்து பொறுப்பேற்று அழைத்துச் செல்ல, செங்கல்பட்டு வந்தடைந்தபோது அங்கு ஏற்கனவே தயாராக இருந்த 4 ஆம்புலன்ஸ்கள் இணைந்து சென்னைக்குள் செல்லச் செல்ல, இங்கிருந்துதான் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிறது. ஆனாலும் குழந்தையை அழைத்துவரும் ஆம்புலன்ஸ்க்கு முன்னாள் 7 ஆம்புலன்ஸ்கள் செல்கின்றனவே? அலறல் சத்தத்தில் பெரும் பதற்றத்துடன் பலரும் ஒதுங்கிக்கொடுக்க, கூடுவாஞ்சேரியில் கூடுதலாக 5 ஆம்புலன்ஸ்கள் இணைந்து இன்னும் புரோஸஸை துரிதப்படுத்தி, எனர்ஜியை ஏத்துகின்றன. அதன் பிறகு சென்னை நகருக்குள் 4 கி.மீக்கு ஒரு ஆம்புலன்ஸ் இணைய பறந்து சென்று குழந்தை வெற்றிகரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. எனினும் குழந்தைக்கு அதிகம் செலவாகலாம் என்றும் அவசர சிகிச்சை சரியான நேரத்துக்கு வந்ததால் அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளிவந்தன.
வாட்ஸாப்கள் அனைத்தையும் வாக்கி டாக்கியாக மாற்றி, ஆம்புலன்ஸ்களை அவசர உதவிக்கு அழைத்து, பிரதமரை அழைத்துச் செல்வதைப் போல 30 ஆம்புலன்ஸ்களுடன் 7 சுங்கச் சாவடிகளைக் கடந்து 4 மணி நேரம் 10 நிமிடங்களில் குழந்தையைக் கொண்டு வந்து பத்திரமாக சென்னை எக்மோர் மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்னத்தை செய்கிறார்கள் இப்போது? ஹாயாக ஒரு டீயை சாப்பிட்டுவிட்டு அடுத்த சேவையில் இறங்கிவிட்டார்கள். மனிதர் நோக மனிதர் வாழும் வாழ்க்கை இல்லை என்பதை நிரூபித்த இந்த டிரைவர்களுக்கு ஏகோபித்த பாராட்டுக்கள் குவிந்தபடி வருகின்றன.