கரடியிடம் 2 நாட்கள் மாட்டிய 3 வயது குழந்தை.. கடைசியில் நடந்த, உருகவைக்கும் சம்பவம்!
Home > தமிழ் newsகரோலினா பகுதியில் 3 வயது ஆண் குழந்தையை, கரடி ஒன்று 2 நாட்கள் பாதுகாத்துள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பலரையும் உருக வைத்துள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது வடக்கு கரோலினா. அட்லாண்டிக்கில் இருந்து சற்று தூரத்திலேயே இருக்கும் இந்த பகுதி பனிக்காலங்களில் படும் பாடு சொல்லி மாளாது. சாதாரணமாகவே எல்லாராலும் இந்த குளிரில் தாங்குவது கடினமான ஒன்றாக இருக்கும். இந்த காட்டுப்பகுதிகளில் 3 வயது சிறுவன் ஒருவன் தொலைந்து போன சம்பவம் சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வடக்கு கரோலினா மாகாணத்தில்தான் கேசி ஹேத்வே என்கிற 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். ஆனால் ஹாத்வேயுடன் விளையாடச் சென்ற மற்றச் சிறுவர்கள் வீடு வந்து சேர்ந்த நிலையில் சிறுவன் ஹேத்வே மட்டும் வீடு திரும்பாமல் காணாமல் போனதால் அவனது பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து காணாமல் போன சிறுவனை மீட்க ராணுவ உதவி வரை நாடிய பெற்றோர்கள் ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றைக் கொண்டு தேசிய பேரிடர் மீட்புப்படை உதவியுடன் போராடி ஒருவழியாக சிறுவனை ஒரு புதரில் இருந்து மீட்டனர். அதிகப்படியாக 20 பாரன்ஹீட் வரை குளிர் நிலவியதால் கடுமையான குளிரில் சிறுவன் பாதிக்கப்பட்டிருந்ததாக மீட்புப்படையினர் தெரிவித்தனர். அதே சமயம் அப்பகுதியில் அதிக கரடிகள் நிலவும் அபாயம் உள்ளதால் கரடியிடம் இருந்து சிறுவன் பாதுகாப்பாக இருந்ததே பெரிய விஷயம் என்று கூறினர்.
ஆனால் அப்போது சிறுவன் கூறிய தகவல்கள் அனைவரையும் மேலும் அதிரவைத்தது. அதன்படி, சிறுவன் தான் தொலைந்துபோன பிறகு தன்னை ஒரு கரடிதான் அரவணைத்து தன்னிடம் பாசமாக பழகியதாகவும், கடந்த செவ்வாய் அன்று காணாமல் போன தன்னை இத்தனை நாட்கள் கரடிதான் பாதுகாத்து வந்ததாகவும் கூறியுள்ளான். இதைக் கேட்ட அந்த பெற்றோர்கள், கடவுள்தான் கரடி வடிவில் வந்து தங்கள் குழந்தையை காப்பாற்றியிருக்கிறார் என்று மகிழ்ந்தனர்.