பொய்யான பாலியல் புகாரினால், இலட்சியத்தை தொலைத்த 3 இளைஞர்களின் சோகம்!
Home > தமிழ் newsபல மாதங்களுக்கு முன், ஹரியானாவில் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆர்த்தி , பூஜா எனும் 2 பெண்கள், பேருந்திலேயே வைத்து 3 இளைஞர்களை அடித்துள்ளனர். அவர்களின் வீரதீரச் செயலை பாராட்டி ஹரியானா அரசு இருவருக்கும் தலா 31 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கியதோடு பலரும் பாராட்டினர். இளைஞர்களோ செக்ஷன் 353 உள்ளிட்ட 2 பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.
ஆனாலும், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தாமதமாக தெரிய வந்தன. இந்த 2 இளம் பெண்களும் மூதாட்டி ஒருவரின் இருக்கையை ஆக்கிரமித்ததை தட்டிக்கேட்டதாகவும், அதனால் அந்த 3 இளைஞர்கள் மீது வெறுப்பாகிய பெண்கள் அவர்களை பழிவாங்குவதற்காக பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அடித்து, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்த 2 பெண்களுக்கும் கல்லூரி செல்லும்போது காவல்துறையினரின் பாதுகாப்பு உள்ளிட்ட பல வசதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவு, பாலியோகிராப் சோதனை மூலம் ஆர்த்தி மற்றும் பூஜா ஆகிய இரண்டு பெண்களும் பொய் கூறினார்கள் என்பதை அறிந்துள்ளனர்.
இதனை அடுத்து இளைஞர்கள் ஏறக்குறைய 2 வருடங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் ராணுவத்தில் சேர விரும்பிய இளைஞர்கள் கைதாகியதாலும், தண்டனை காலத்தில் தங்கள் வயது வரம்பினை இழந்ததாலும் நொறுங்கிப் போயினர். இளைஞர்களின் தாயார், பிள்ளைகளை ஒழுங்காய் வளர்க்காதவர் என அக்கம் பக்கத்தினோரால் பேசப்பட்டதால் முகத்தை மூடிக்கொண்டே வெளியில் சென்றுவரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் இந்த 3 இளைஞர்கள் மீது ஆர்த்தி, பூஜா இருவரும் மேல்முறையீடு செய்த வழக்கும் நடுவர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #MeToo புகார்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருக்கும் இப்போதைய தருணத்தில் இவ்வழக்கு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.