டெல்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்?உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.

 

மேலும் வீட்டின் சுவர்களில் சில விசித்திரமான தடயங்களும் போலீசாருக்குக் கிடைத்துள்ளன. வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அந்த குழாய்கள் உள்ளே எதனுடனும் இணைக்கப்படவில்லை. இதனால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.


அவர்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை சோதித்துப் பார்த்த போலீசார் அதில் அவர்கள் வீட்டிற்கு இரவில் யாரும் வரவில்லை என்றும், அவர்கள் தற்கொலைக்கு தயாராகிய காட்சிகள் அதில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவித்தனர்.


இந்த நிலையில் புராரி  பகுதி குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தற்கொலை தான் செய்து கொண்டுள்ளனர் என, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. டெல்லி காவல்துறைக்கு வழங்கப்பட்ட  பிரேத பரிசோதனை அறிக்கையில்  10 பேர் தூக்கிடப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இந்தநிலையில்  இந்த கூட்டு தற்கொலையின் போது 3 பேர் தப்ப முயற்சி செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார் கூறுகையில், "இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. ஆனால் இறந்த 11 பேரில் 3 பேரின் கைகட்டுகள் அவிழ்ந்து இருந்தன. மற்ற அனைவரின் கைகளும் பின்புறம் கட்டப்பட்டு இருந்த நிலையில், லலித் அவரது மனைவி டினா மற்றும் லலித்தின் சகோதரர் பாவனேஷ் ஆகியோரின் கைகள் முன்புறமாக கட்டப்பட்டு இருந்தன. அந்த கட்டுகள் அவிழ்ந்து தளர்வாக இருந்தன.  இதனால் கடைசி நேரத்தில் இவர்கள் மூவரும் தப்பிக்க முயற்சி செய்திருக்கலாம்,'' என தெரிவித்துள்ளனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS