'இரவில் ஆபாச வீடியோ போட்டு பாலியல் வன்கொடுமை'...ஆதரவற்ற சிறுமிகளுக்கு நிகழ்ந்த கொடூரம்!
Home > தமிழ் newsகுழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற சிறுமிகளுக்கு,பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பக மேலாளர் போக்ஸோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மகாசக்தி நகர் பகுதியில் அருணை குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வந்துள்ளது.இது அரசின் அனுமதியின்றி செயல்படுவதாகவும்,இந்தக் காப்பகத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ரகசிய புகார் சென்றது.உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி,காப்பகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்.
காப்பகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது அங்கிருந்த ஆதரவற்ற சிறுமிகள் கண்ணீர் மல்க தங்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்தார்கள்.அங்கிருந்த 15 குழந்தைகளிடம் காப்பக மேலாளர் வினோத்குமார் என்பவர் இரவில் அங்கேயே தங்கிக்கொண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கண்ணீருடன் கூறியுள்ளனர்.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியாகின.
இரவு நேரத்தில் விடுதி மேலாளர்,காப்பகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் ஆபாசப் படங்களைப் போட்டுக்காண்பித்து அதை பார்க்குமாறு சிறுமிகளை வற்புறுத்தியிருக்கிறார்.மேலும் சிறுமிகளிடம் அத்துமீறி நடந்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.இதை எதிர்த்து கேட்டால் ''காப்பகத்தை விட்டு வெளியே அனுப்பி விடுவதாகவும்,அதன் பிறகு சாப்பிடவும்,தங்கவும் இடம் இல்லாமல் அலைய வேண்டும்'' என மிரட்டினார் எனவும் சிறுமிகள் கண்ணீர்மல்க தெரிவித்தார்கள்.
நடந்த சம்பவங்களை கேட்ட காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து காப்பக மேலாளர் வினோத்குமாரை உடனடியாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளை மீட்டு அரசு காப்பகத்திற்கு மற்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார்.மேலும் எப்படி அரசு அனுமதியின்றி காப்பகம் நடத்தினார்கள்,இதன் பின்புலத்தில் வேறு யாரேனும் இருக்கிறார்களா,அரசு அனுமதியில்லாத காப்பகத்திற்கு எந்த வழியில் நிதி வந்தது குறித்தும் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் காப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்-டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அதனை சோதனை செய்ததில் 100-க்கணக்கான ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.காப்பகத்தின் இரவு காவலர், சமையலர் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், திருவண்ணாமலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.