மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அமேசான் OTT தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'திரிஷ்யம்-2'.
2013-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த முதல் பாகத்தின் தொடர்ச்சியான இதில் மீனா, அன்சிபா, எஸ்தர், ஆஷா சரத், முரளி கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
6 வருடங்களுக்கு முன் ஒரு கொலை செய்து, அதிலிருந்து புத்திசாலிதனமாக தப்பித்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் ஜார்ஜ்குட்டி. ஆனால் இப்போதும் செய்த குற்றம் அவர்களை தொடர்ந்து துரத்தி உறக்கத்தை கெடுத்தபடியே இருக்க, மீண்டும் வழக்கை கையில் எடுக்கும் போலீஸுக்கு சில முக்கிய ஆதாரங்களும் கிடைக்கின்றன.? இதை தொடர்ந்து கைது செய்யப்படும் ஜார்ஜ் குட்டி, இம்முறையும் போலீஸிடம் இருந்து தப்பித்தாரா. இல்லையா..? அந்த குற்றத்திற்கான தண்டனை என்ன.? என்பதே மீதிக்கதை.
ஜார்ஜ்குட்டியாக மோகன்லால். செய்த தவறை நெஞ்சில் சுமந்தபடி திரிவது, மனைவியுடன் ஆங்காங்கே குறும்பு என ஒன்-மேன் ஷோ காட்டுகிறார். சினிமா பற்றி நேசித்து பேசும் காட்சிகளில் யதார்த்தத்தையும் விசாரணை காட்சிகளில் அழுத்தத்தையும் கூட்டுகிறார்.
மீனா வெள்ளெந்தி அம்மாவாக ஒரு பக்கம், பதட்டத்தில் தவிப்பது இன்னொரு பக்கம் என கூடுதல் பலம் சேர்க்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் முரளி கோபி குரலிலும் நடையிலும் போலீஸ் மிடுக்கு.
அனில் ஜான்ஸனின் பின்னணி இசை த்ரில்லர் படங்களுக்கே உரியவிதத்தில் பரபரப்பை தொற்றி கொள்ள வைக்கிறது. சதீஷ் குருப்பின் கேமரா இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் அழகையும் அடர்த்தியையும் கலந்தே கொடுக்கிறது.
பெரும் வரவேற்பை பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்து, அதில் சுவாரஸ்யமமும் கூட்டி வெற்றி பெறுகிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். கதையின் போக்கில் அதன் சஸ்பென்ஸை நிதானமாக வளரவிட்டு சொல்லிய விதம் நிச்சயம் ரசிக்க வைக்கிறது. அடுத்தடுத்த முடிச்சுகளை போட்டபடியே இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து பக்கா த்ரில்லர் ஜானரில் க்ளாப்ஸ் வாங்கிறார்.
மிகவும் தெளிவாக கதையின் சஸ்பென்ஸ்க்கு முதல் பாதியில் கொடுக்கப்பட்ட பில்டப்பை க்ளைமாக்ஸ் சரசரவென அவிழ்த்தது ஒரு குறை. இன்னும் கூட அங்கே மெதுவாக சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். ஆனால் எடுத்து கொண்ட ஜானருக்கு நேர்மையாக இக்கதையை காட்சிப்படுத்திய விதத்தில் மொத்த படக்குழுவுமுமே பாராட்டுதலுக்குரியது.