தியா தன் கல்லூரியில் படிக்கும் ரோகித் மீது காதல் வசப்படுகிறாள். அவளின் அளவுகடந்த தனிமையும், தயக்கமும் காதலுக்கு வில்லனாகிறது. காதலை சொல்வதற்குள் ரோகித் வெளிநாடு சென்று விடுகிறான்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் பிளாட்டுக்கு குடிவருகிறான் ரோகித். மீண்டும் தொடர்கிறது காதல். எதிர்பாராத திருப்பங்களும், ஆதியின் வருகையும் இறுதியில் தியாவை கொண்டு சேர்க்கும் இடம் தான் படத்தின் கதை.
ஒரு காதல் கதையை பெண்ணின் பார்வையில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.அஷோகா. ஒவ்வொரு சீனுக்கும் தன் விஷ்வல் மூலம் புது ருசியூட்டியிருக்கிறார். தியாவாக நடித்த குஷி கதைக்கு பிசிறில்லாத பொருத்தம். ஒரு Introvert கதாப்பாத்திரத்துக்கு அவர் உயிரூட்டியிருக்கும் விதமும், சன்னமான மனக்குரலில் கதை சொல்லும் பாணியும் மனதில் நிற்கிறது.
தியாவின் Character, 2001ம் ஆண்டு வெளியாகி உலகெங்கும் கொண்டாடப்பட்ட பிரஞ்சு படமான அமிலியை நினைவு படுத்துகிறது. படத்தின் விஷ்வல்களில் இயக்குநர் Jean-Pierre Jeunet தாக்கம் அங்கங்கே தெறிக்கிறது. குறிப்பாக ரோகித்தை முதல் தடவை பார்க்கும் தியாவின் இதயத்துடிப்பை இயக்குநர் எக்ஸ்ரே எடுத்து காட்டுகிறார்.
தியாவுக்கு அடுத்தபடியாக கவனம் ஈர்ப்பவர் ஆதியாக வரும் பிரித்திவ் அம்பார். ஆதிக்கும் அவர் தாய்க்குமான உறவு அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. தியாவை மனச்சோர்வில் இருந்து மீட்கும் ஆதி, வாழ்வின் சுழியில் சிக்கி நம்பிக்கையிழப்பது யதார்தமான பகுதி.
நவீன் ராஜின் எடிட்டிங், விஷால் விட்டல் - சவுரம் வக்மரின் ஒளிப்பதிவு மற்றும் அஜனீஷ் யோக்நாத்தின் இசை கதையை மீறி கவனம் ஈர்க்காமல் கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த இலக்கியங்கள் திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும் பல முறை மறுஉருவாக்கம் செய்யப்படும்.
ஷேக் ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட், ஹாம்லட் அவ்வாறு பல வடிவங்களை கண்டிருக்கின்றன. அதே வரிசையில் ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி (Fyodor Dostoevsky) படைப்புக்கு முக்கிய இடமுண்டு.
உலகப்புகழ் பெற்ற அவரது சிறுகதை ’வெண்ணிற இரவுகளு’ க்கு (White Nights) ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான வெர்ஷன்கள் உண்டு. உதாரணமாக: Casablanca (1942), Brief Encounter (1945), இயற்கை (2003). அந்த வரிசையில் கன்னட தரப்பில் இடம்பிடிக்கும் படம் தியா.