ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராஜ்குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்டோர் நடிப்பில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள தமிழ் வெப் தொடர் ‘ட்ரிப்பிள்ஸ்’. பாலாஜி ஜெயராமன் எழுத்தில் சாருகேஷ் சேகர் இத்தொடரை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.
நண்பர்களுடன் இணைந்து ஐ.டி கம்பனியில் காபி ஷாப் நடத்தி வருகிறார் ஜெய். அங்கு ஹெச்.ஆர்-ஆக இருக்கும் வாணி போஜன் மீது கண்டதும் காதல். அது இருவரின் திருமணம் வரையில் செல்ல, 4 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. சமூகத்தின் அழுத்தத்தால் இருவரும் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.
இரண்டாவதாக மாதுரி ஜெயினை மணக்க தயாராகிறார் ஜெய். அதே நேரத்தில் வாணி போஜன் கர்ப்பமாகிறார். இந்த சூழலில் நடக்கவிருந்த ஜெய் – மாதுரி கல்யாணம் என்ன ஆகிறது..? ஜெய் – வாணி போஜன் மீண்டும் இணைந்தார்களா..? என்பதை கரண்ட் ஜெனரேஷன் காதல் கதையாக சொல்லும் கலகலப்பான காமெடி தொடர்தான் இந்த ‘ட்ரிப்பிள்ஸ்’.
ஹீரோ ராம்-ஆக ஜெய். தனது வழக்கமான நடிப்பை குறைவில்லாமல் கொடுக்கிறார். கதாநாயகி வாணி போஜன் காதல் காட்சிகளில் அழகையும் எமோஷனல் காட்சிகளில் ஆழத்தையும் தாங்கி கூடுதல் பலம் சேர்க்கிறார். மேலும் விவேக் பிரசன்னா – நமிதா கிருஷ்ணமூர்த்தி – ராஜ்குமாரின் கூட்டணியும் காமெடியில் கலாட்டா செய்கின்றனர்.
இதுமட்டுமின்றி மேலும் பல கேரக்டர்களை கதைக்குள் புகுத்தி காமெடி விருந்து வைக்க முயற்சித்திருக்கிறது படக்குழு. அதற்கு ஏ.வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் ஆச்சாரி கேங் முந்தளவு கேரண்டி கொடுக்கின்றனர்.
கலை செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும் ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கும் கதைக்கு தேவையானவற்றை செய்து கொடுத்திருக்கிறது. பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்க பின்னணி இசை ஒரே மாதிரியாக பயணிப்பது சலிப்பை தருகிறது. இன்னும் கொஞ்சம் வெரைட்டி காட்டியிருக்கலாம். எழுத்தாளர் பாலாஜி ஜெயராமன் தனது எழுத்துக்களால் நகைச்சுவை பகுதிகளில் கூடுதல் சுவாரஸ்யம் கூட்டி ஸ்கோர் செய்கிறார்.
ராம், மைதிலி, ஜானகி, மாது என கதாபாத்திர பெயர்களில் மட்டுமின்றி காமெடியிலும் கிரேசி மோகனை நியாபகப்படுத்துகிறது ட்ரிப்பிள்ஸ். கதையின் போக்கில் நகைச்சுவைக்கு சுவாரஸ்யமான இடங்கள் இருப்பதால், அதை சரியாக பயண்படுத்தி கொண்டிருக்கிறார் இயக்குநர் சாருகேஷ் சேகர். வெப் கன்டென்ட் என்பதால், சில அடல்ட் விஷயங்களை கூட ஓப்பனாக பேசியிருக்கிறார்கள்.
காமெடிதான் எடுத்த கொண்ட ஜானர் என்பதால், லாஜிக் என்பது பல்வேறு இடங்களில் மிஸ் ஆகிறது. மேலும் கதையின் அடித்தளமாக இருந்த ஜெய் – வாணி உடனான உறவும், அதன் எமோஷன்களும் க்ளைமாக்ஸ்-ல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காணாமல் போவது வருத்தம்.