ஆனந்த விகடன் புரொடக்ஷனின் தயாரிப்பில் தமன்னா, ஜி.எம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள் தாஸ், நந்தினி மற்றும் பலர் நடிப்பில் ராம் சுப்ரமணியன் என்கிற இந்திரா சுப்ரமணியன் இயக்கத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ‘நவம்பர் ஸ்டோரி’.
தமன்னாவின் அப்பாவும் பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளருமான எம்.ஜி.குமார் எர்லி ஆன்செட் அல்ஸைமரால் அவருடைய இறுதி காலத்தில் ஞாபங்கள் மறைய ஆரம்பிக்கின்றன. அவருக்கு சிகிச்சை செய்ய பணம் செலவாகும் என்பதால் பூர்வீக வீட்டை விற்க முயல்கிறார் தமன்னா. ஆனால் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு வரமறுக்கிறார் தமன்னாவின் தந்தை ஜி.எம்.குமார். வீடு பார்க்க வருபவர்களை பிடித்து கத்திவிடுகிறார். இதனிடையே காவல் நிலையத்தில் FIR File Data-களை நிர்வகிக்கிறார் தமன்னாவின் நண்பர் விவேக் பிரசன்னா. அங்கு யாரோ ஒரு ஹேக்கர் Dataக்களை நவம்பர் 16-ஆம் தேதி ஹேக் செய்துவிட்டதாக விவேக்குடன் பணிபுரியும் தமன்னா கண்டுபிடிக்கிறார். தமன்னா அந்த ஹேக்கரையே சுத்தலில் விடுகிறார்.
இப்படி போகும் கதையில் தமன்னாவின் பூர்விக வீட்டில் ஒரு பெண்மணி நவம்பர் 16-ஆம் தேதி இறந்து கிடக்க, அதே வீட்டுக்கு தமன்னாவின் தந்தை, ஒவ்வொரு நவம்பர் 16 அன்றும் செல்வது போல் அன்றும் செல்ல, ஆனால் போலீஸின் பார்வையில் இருந்து தந்தையை காப்பாற்றும் தமன்னா, போலீஸை சுத்தலில் விடுவதுடன் தாமே உண்மையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இன்னொருபுறம் பிணவறை டாக்டர் பசுபதி போலீஸூடன் இணைந்து இந்த இன்வெஸ்டிகேஷனில் ஈடுபடுகிறார். இறுதியில் கொலையாளி யாரென தமன்னா கண்டுபிடித்தாரா? இதெல்லாவற்றிற்கும் நவம்பர் 16-ஆம் தேதிக்கும் அந்த ஹேக்கர்களுக்கும் என்ன சம்மந்தம்? என்பதெல்லாம் தான் மீதிக் கதை.
7 எபிசோட்களாக உருவாகி வந்திருக்கும் இந்த நவம்பர் ஸ்டோரியில் தமன்னா, அனு என்கிற கதாபாத்திரமாக வாழ்கிறார். தந்தையை பற்றிய கவலை, தினசரி வேலை, தனித்தே எல்லாவற்றையும் சந்திப்பது, துணிச்சல், சாதூரியம், சமயோஜிதம், எதார்த்தமான நடிப்பு, அழுகை, ஆற்றாமை என நடிகையாகவும் நாயகியாகவும் தனித்து நிற்கிறார். பசுபதியின் முற்பாதி இன்ஸ்வெஸ்டிகேஷன் படலம் சூடுபிடிக்க வைக்கிறது. சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. இன்ஸ்பெக்டராக வரும் அருள் தாஸ் சீரியஸ்ல், குழப்பம், கோபம், காமெடி என வெரைட்டி காட்டுகிறார். தமன்னாவின் அப்பா எம்.ஜி.குமாரின் சர்ரியலிஸ்டிக் நடிப்பு இந்த சீரிஸின் பலம். விவேக் பிரசன்னா கதையை நகர்த்த நன்றாக துணைபுரிகிறார்.
விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு பகல், இரவு, பிணவறை, கலர், பிளாக் அண்ட் ஒயிட் ஃப்ரேம் என புகுந்து விளையாடியுள்ளது. இந்த சீரிஸில் லைட்டிங்கிற்கு தனி பாராட்டுக்களை தந்தே ஆகவேண்டும். சரண் ராகவனின் பின்னணி இசை கதையை கச்சிதமாக நகர்த்துகிறது. ஷரண் கோவிந்தசாமியின் எடிட்டிங்கில் இன்னும் திரைக்கதையின் வேகத்தை கூட்டி, சில தொய்வான இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.
போலீஸார் இரு குழுக்களாக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி அபத்தமானது. எம்.ஜி.குமார் வீட்டில் இறந்துபோகும் பெண்மணியின் விபரத்தை எடுக்க போலீஸ்க்கு ஏன் இத்தனை நாட்கள் எடுக்கின்றன? இது 2021 தானே? 43 பேருக்கு விபத்து நடந்து அனுமதிக்கப்படும் மருத்துவமனையில் ஒரு டியூட்டி டாக்டர் கூடவா இல்லை? போலீஸார் கூடவா இல்லை? தமன்னாவும் போலீஸும் பசுபதியை தேடிய நிலையில், பசுபதி இருக்கும் இடம் தேடி தமன்னாவின் தந்தை செல்கிறார். அங்கு செல்லும் தமன்னா ஏன் போலீஸுடன் செல்லவில்லை.? கடைசிவரை தீவிரமான இன்வெஸ்டிகேஷனை விறுவிறுப்புடன் முன்னெடுத்த அருள் தாஸ் க்ளைமேக்ஸ் வந்ததும் ஏன் துண்டறுக்கப்படுகிறார்.? 3 மெடிக்கல் இளைஞர்களும் பசுபதியின் பெண்ணை காக்க ஏன் போலீஸை நாடாமல் தாங்களே ஹேக்கிங்கில் இறங்குகின்றனர்? என்றெல்லாம் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடிவதில்லை.
கதை, நூல் பிடித்தது போல் எந்தவித இடையூறுக் காட்சிகளும் இன்றி திரைக்கதையை நோக்கி மட்டுமே பயணிப்பது சிறப்பு. போஸ்ட் மார்டம், அடாப்ஸி என ஒவ்வொரு விஷயத்திலும் டீடெயிலிங் செம்ம. கதையின் முடிச்சுகளும் திருப்பங்களும், குறைவான வசனங்களும் குறிப்புகளுடன் கூடிய காட்சிமொழியும் என திரைக்கதை இந்த சீரிஸின் ப்ளஸ்.
பசுபதியின் சைகோ மனநிலை இன்னும் சரியாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கலாம். மொத்த சீரிஸும் பாமர ஆடியன்ஸ்களுக்கும் கனெக்ட் ஆகுமாறு இருக்கத் தவறுகிறதோ என தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. இன்னும் விறுவிறுப்பை கூட்டி, தொய்வை குறைத்திருந்தால் ‘நவம்பர் ஸ்டோரி’ ஒரு Complete க்ரைம் த்ரில்லர் சீரிஸ் அனுபவம்!