Zee 5 ஆன்லைன் தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ்தான் முகிலன். கனா காணும் காலங்கள், ஆபீஸ், செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ரம்யா பாண்டியன், ஆடுகளம் நரேன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், காயத்ரி ரேமா, ஜூனியர் பாலய்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஶ்ரீராம் ராம் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார்.
100-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி முகிலன், கதையின் தொடக்கத்திலேயே மூன்று முக்கிய புள்ளிகளை கொன்றுவிட்டு, குடும்பத்துடன் துபாய்க்கு தப்பி செல்கிறார். இந்த வழக்கு சீரியஸாக, முகிலனை கண்டுபிடித்தே தீர வேண்டும் என கங்கனம் கட்டுகிறார் காவல்துறை அதிகாரி ராஜேந்திரன். இத்தோடு முகிலன் நம்பி இருந்த அரசியல் ஆட்களும் கைவிரிக்க, அவரை என்கவுன்டரில் போட்டுத்தள்ள திட்டம் தீட்டப்படுகிறது.
இந்த நிலையில் முகிலன் யார்..? ஏன் அவர் அந்த மூன்று பேரை கொலை செய்தார்..? வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முகிலன் மற்றும் அவரது குடும்பத்திற்கு என்ன ஆனது..? ராஜேந்திரனுக்கும் முகிலனுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் என்ன.? என்பதை 1994-ல் இருந்து 2016-க்குள் நடக்கும் கதையாக, வெவ்வேறு ஊர்களில் சொல்லப்பட்டிருக்கிறது, இந்த முகிலன்.
நாம் அன்றாடம் கடந்து போகும் சென்னை புறநகர் செய்திகள். அதிலிருக்கும் மனிதர்களையும், அவர்களின் குரூரத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறது படக்குழு. ரவுடியிசம் கதை என்றவுடன், வெட்டுக்குத்து காட்சிகள், தெறிக்கும் ரத்தம், சரமாரி துப்பாக்கி சூடு ஆகியவற்றை கொண்டு நிரப்பாமல், அந்த மனிதர்களின் கோபம், துரோகம், காதல், காமம், வஞ்சகம் என உணர்வுகளின் வழியே கதையை சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
சென்னை, காஞ்சிபுரம் தொடங்கி துபாய், கம்போடியா வரை பல்வேறு காலகட்டங்களில் கதை சொல்லப்பட்டிருப்பனும், எந்த குழப்பமுமில்லாமல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பகுதிகளில் நடக்கும் அரசியல், ரவுடியிசம், ரியல் எஸ்டேட் என உண்மை சம்பவங்களை கொண்டு இத்தொடருக்கு கூடுதல் கனம் ஏற்றியிருக்கிறது எழுத்தாளர்களின் குழு. வசனங்களும் அந்த களத்திற்கு ஏற்ப அமைந்திருப்பினும், கொஞ்சம் கூடுதலான கெட்ட வார்த்தைகளை வலிந்து தினித்திருப்பது போல உள்ளது.
முகிலனாக நடித்திருக்கிறார் கார்த்திக் ராஜ். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய உழைப்பை கொடுத்திருக்கிறார். முகிலன் கதாபாத்திரத்திற்கு அவர் காட்டியுள்ள இறுக்கமான உடல்மொழி பக்காவாக செட்டாகியிருக்கிறது. இளமை காலத்து எபிசோடுகளை இன்னும் கொஞ்சம் துள்ளலாக கொடுத்திருக்கலாமே என்ற என்னம் மட்டுமே தோன்றுகிறது. ரம்யா பாண்டியன் 90-களில் இளமையையும் முடி நரைத்த பிறகு அமைதியையும் அளவாக காட்டியிருக்கிறார். காயத்ரி ரேமாவுக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை.
திரையில் முக்கிய கதாபாத்திரம் சரவணனாக, ராபர்ட் எந்த குறையும் இல்லாமல் செய்து கொடுத்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் தனது எக்ஸ்பிரஷ்ன்கள் மூலம் கவரவும் செய்கிறார். ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலய்யா உள்ளிட்டோர் தேவைக்கேற்ற நடிப்பை கொடுத்துள்ளனர். அனில் கதாபாத்திரமும் அதில் நடித்திருந்தவரும் மனதில் நிற்கின்றனர்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, ரவுடியிசம் பகுதிகளுக்கு ராவாகவும், காதல் காட்சிகளில் பூவாகவும் ஒலித்து கூடுதல் பலம் சேர்கிறது. ஃபாரூக் ஜே பாஷாவின் கேமரா வெவ்வேறு காலக்கட்டங்களில் பயணிக்கும் கதையை கச்சிதமாக கண்முன் கொண்டு வருகிறது. எடிட்டர், ஆர்ட் டைரக்டர் என மற்ற டெக்னிஷயன்களின் பணிகளும் பாராட்டக்குரியதே.
கதைக்களம் வலுவாக இருந்த நிலையில், சில தேவையற்ற காட்சிகளை இணைத்திருப்பது நமது பொறுமையை கொஞ்சம் சோதித்து விடுகிறது. முகிலன் இரண்டாவதாக பழகும் பெண்ணின் நிலை என்ன.? அவர் எந்த வகையில் இந்த கதைக்கு வலு சேர்க்கிறார்..? முகிலனை தேடும் போலீஸ் விசாரணையில் ஏன் எந்த பரபரப்பும் இல்லை..? மாஃபியா கும்பல் எபிசோடுகள் வலிந்து தினிக்கப்பட்டது எதற்காக..? என பல கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
நடிகர்களின் தோற்றத்தில் உள்ள மாற்றங்கள், குரலிலும் நடிப்பிலும் வெளிப்படாமல் போயிருப்பது., அந்த காலகட்ட மாற்றத்துடன் நம்மை ஒன்றவிடாமல் செய்வது போல இருக்கிறது. அதீத ஆழம் கொண்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து., அந்த களத்தின் மனிதர்கள் கொண்ட உணர்ச்சிகளை முன்னிறுத்தி, மேம்போக்காக அதை கையாளாமல் கதை சொல்லியிருப்பதில் டைரக்டருக்கு ஒரு சபாஷ்.!