Addham (அத்தம்). மூன்று சிறு கதைகளை உள்ளடக்கி, தெலுங்கு ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்-ஆன Aha தளத்தில் இன்று வெளியாகியுள்ள அந்தாலஜி திரைப்படம். மூன்று கதைகளையும், மணிரத்னம் படங்களில் பணியாற்றியுள்ள சிவா ஆனந்த் எழுதியுள்ளார். சார்ஜுன், பரத் நீலகண்டன், சிவா ஆனந்த் ஆகியோர் மூன்று குறும்படங்களையும் முறையே இயக்கியுள்ளனர். 20 நிமிடங்களில் ஒரு கதை என சுமார் ஒருமணி நேரத்திற்கு மூன்று எபிசோடுகளாக இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
The Road That Never Ends - நெடுஞ்சாலையில் தனியே பயணிக்கும் ஒரு லாரி ட்ரைவரிடம் (ஜெயப்பிரகாஷ்), பரிட்சையில் ஃபெயில் ஆனதால் வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவன் (ப்ரவீன்) லிஃப்ட் கேட்டு ஏறுகிறான். அவர்கள் வந்த லாரி ஆக்சிடென்ட் ஆகி ட்ரைவர் இறந்து போக, அவர் பையில் இருந்த பணத்தை சிறுவன் எடுத்து கொள்கிறான். இந்த விவரம் அறியாத ட்ரைவரின் மனைவி (ரோகிணி), அவன் மீது கரிசனம் காண்பித்து, அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். பணத்தை அபகரித்த குற்றவுணர்வுடன் சிறுவன், ட்ரைவரின் மனைவி முன் வந்து நிற்க, அதற்கடுத்து நிகழும் சம்பவங்களின் முடிவே இந்த முடிவில்லா சாலையின் கதை.
Crossroads - தன் மனைவியிடம் அதிருப்தியும் எரிச்சலும் அடைந்த பிரசன்னா, ஒரு பாலியல் தொழிலாளியை சந்திக்க முடிவு செய்கிறார். இதற்காக ஒரு பாரில் மது அருந்தியபடி காத்திருக்க, அவர் எதிர்ப்பார்த்த பாலியல் தொழிலாளியாக அறிமுகமாகிறார் பவித்ரா. இதை தொடர்ந்து, இருவருக்கும் அவர்களின் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்து நடக்கும் உரையாடலின் முடிவில், பிரசன்னா எதிர்ப்பாத்திருந்த பாலியல் தொழிலாளி பவித்ரா அல்ல என்பது தெரிய வருகிறது. இந்த தர்மச் சங்கடமான நிலைக்கு பின்னர், அவர்களுக்குள் என்ன ஆனது என்பதே இந்த குறுக்குசாலைகளின் கதையாகிறது.
The Unwhisperable Secret - ஒரு அம்மாவை காரில் குடித்துவிட்டு பயணிக்கும் பொழுது, இடித்து சாகடித்த குற்றவுணர்ச்சியுடன் மனநல மருத்துவர் வரலக்ஷ்மியை பார்க்க வருகிறார் கிஷோர். கிஷோரின் பணத்திமிரையும் ஒரு கொலை செய்துவிட்டு தப்பித்திருப்பதையும் அறிந்த வரலக்ஷ்மி ஒரு பக்கம் மருத்துவராக செயல்படுவதா., இல்லை அவரை போலீஸில் ஒப்படைப்பதா என குழம்புகிறார். இதன் பிறகு, நடக்கும் சம்பவங்களின் முடிவில், வரலக்ஷ்மியின் முடிவு என்னவாக மாறியது..? கிஷோரின் குற்றவுணர்வு துடைக்கப்பட்டதா.? என்ற கேள்விக்கான விடையே இந்த விவரிக்க முடியாத இரகசியத்தின் கதை.
இந்த மூன்று கதைகளுமே., Morality is the Moving GoalPost என்று தத்துவத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. எது தேவையோ, அதுவே தர்மம். அதுவே அறம் என்பதற்கேற்ப, வெவ்வேறு மனிதர்களின் கதைகளை சிறப்பாக எழுதியிருக்கும் சிவா ஆனந்த்க்கு பாராட்டுக்கள். பல விஷயங்கள், சூழ்நிலையின் அவசியம் கண்டு அறம் சார்ந்து உடைக்கப்படுவதின் அழுத்தத்தை எழுத்துக்களால் சிறப்பாக கையாண்டுள்ளார் சிவா. பெரும் உரையாடல்களின் மூலமே நிகழும் கதையென்பதால், வசனங்களின் பங்கினை சரியாக அமைத்து கொடுத்திருக்கிறார் கிரண்.
எலைட் மனிதராகவே அதிகம் பார்த்து பழக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ், லாரி ட்ரைவர் வேடத்தில் கொஞ்சம் ஒட்டாமல் போவது போல தெரிகிறது. சிறுவனாக வரும் ப்ரவீன், படம் முழுவதும் அப்பாவித்தனத்தையும் சுமந்து திரிகிறார். வழக்கம் போல, ரோகிணி தனது நடிப்புக்கு எந்த குறையும் வைக்காமல், அக்கதையின் முடிவு வரை தாங்கி பிடித்து பலம் சேர்க்கிறார். அதே போல, க்ராஸ்ரோட் கதையில் பிரசன்னா கச்சிதமாக இருக்கிறார். பாலியல் தொழிலாளியாக வரும் பவித்ரா அளவிற்கேற்ற நடிப்பு. ஆனால், பிரசன்னாவின் கதாபாத்திரம் வலுவில்லாமல் அமைக்கப்பட்டிருப்பது, கொஞ்சம் தொய்வை கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. அபிராமி தொடக்கத்தில் மட்டுமே வந்து போகிறார்.
மனநல மருத்துவராக வரலக்ஷ்மி எப்போதும் போல மிடுக்கான நடிப்பை கொடுத்திருக்கிறார். கிஷோரும் படம் நெடுக தனக்குள் இருந்த குற்றவுணர்வை கொஞ்சமும் பிசகாமல் கொடுத்து அசத்தியிருக்கிறார். கே.சுந்திரமூர்த்தியின் பின்னணி இசை படம் நெடுங்கிலும் அழகாக பயணித்து., ஒரு கதை சொல்லியாக வருவது அழகு. செல்வகுமாரின் கேமரா ஆந்திரா புறநகரை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது. ஶ்ரீகர் பிரசாத்தின் கத்திரியும் அளவிற்கேற்ப அமைந்திருக்கிறது.
மூன்று கதைகளையும், ஒரு சிறுகதையின் அளவில், பெரிதாக ஸ்பூன் ஃபீட் செய்யாமல் சொல்லப்பட்டிருப்பது நன்று. ஆனால், அதுவே சில இடங்களில் கதாபாத்திரங்களின் ஆழத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது. அறம் சார்ந்து சொல்லப்படும் இந்த கதைகள் இன்னும் வலிமையாக சொல்லப்பட்டிருக்கலாம் என்ற தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால், கண்டிப்பாக அத்தம் - பாராட்டபட வேண்டிய முயற்சியாக இருந்திருக்கலாம். மற்ற இரு கதைகளை விட, வரலக்ஷ்மி - கிஷோர் இடையே நிகழும் பகுதி மட்டுமே மனதில் நிற்கிறது.