வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களைத் தொடர்ந்து, அஜித்-சிவா ‘மெகா’கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
தேனியில் திருவிழா பேச்சின்போது தொடங்கும் தூக்குதுரையின்(அஜித்) கதை சில நிமிடங்களில், பல வருடங்கள் பின்னோக்கி செல்கிறது. கபாடி, அரிசிமண்டி, அடிதடி என அடாவடி செய்யும் இளம் தூக்குதுரை மீது, தன் கிராமத்து முகாமுக்கு மும்பையில் இருந்து வரும் டாக்டர் நிரஞ்சனா(நயன்தாரா) காதலில் விழுகிறார். கல்யாணமும் செய்கிறார். அதன் பின் தூக்குதுரையை பிரிந்து மும்பைக்கே சென்று நயன்தாரா தன் மகளுடனும், தேனியில் அஜித்தும் தனித்தனியாக பிரிந்து ஏன் வாழ்கிறார்கள்? இறுதியில் சேர்கிறார்களா? மகளை சந்திக்கும் அஜித் எவ்வாறு மகளுடனான தன் உறவை புதிதாக உருவாக்குகிறார். மனைவியுடனான உறவினை புதுப்பித்து மீட்டெடுக்கிறார். இவர்களுக்கு இடையில் நடந்தது என்ன என்பதை எல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
'சாதிய பாத்து பிரிஞ்சு நிக்குறவன் கூட சாமிய பாக்க ஒண்ணு சேருவான்'; 'ஒருத்தர புரிஞ்சுக்கலனா தப்பில்ல. தப்பா புரிஞ்சுக்கிட்டாதான் ரொம்ப தப்பு'' 'நேர்மையா இருக்குறது அடுத்தவங்களுக்காக இல்ல-நமக்காக' என மாஸ் படத்துக்கே உண்டான வசனங்கள் சிறப்பு- தட்டவில்லை அலுப்பு!
ஒற்றை ஆளாக சால்ட் அண்ட் பெப்பர் கெட்'அப்பில் இதுவரை ரசிகர்களை கவர்ந்திழுத்த அஜித், இந்தப் படத்தில் சால்ட் மற்றும் பெப்பர் என இரு வேறு காலத்திலும் நடித்திழுத்துள்ளார். செண்டிமெண்ட் வசனங்களை இயல்பான வட்டார மொழியில், தனக்கே உண்டான உடல் மொழியில் அஜித் டெலிவர் செய்துள்ளதை பார்க்கும்போது 'இஞ்சார்றா' என்று தோன்றுகிறது.
முற்பாதியில் நயன்தாராவின் ஹோம்லி லுக், பிற்பாதியில் லேடி சூப்பர் ஸ்டாரின் அதிகார லுக், திரைக்கதையின் பாதியைத் தாங்கும் வெரைட்டி நடிப்பு என எல்லாமே படத்துக்கு பலம் சேர்க்கிறது. முற்பாதியில் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கரின் காமெடிக் கூட்டணியும் பிற்பாதியில் விவேக், கோவை சரளாவின் காமெடியும் கலகலப்பூட்டுகிறது.
பாட்டுக்கு நடுவில் படம் இருக்கோ? என்கிற ஃபீலிங் வந்தாலும், இமானின் இசையில் பட்டையக் கிளப்பும் கிராமியப் பாடல்கள் செம்ம! அதுவும் நீண்ட நொடிகளுக்கு அஜித் ஆடும் அந்த ‘அடிச்சுத்தூக்கு’ பாடல் பலே. தவிர குட்டிக்குட்டி மெலோடி பாடல்களும், சித்ஸ்ரீராமின் குரலும் ரசிகர்களை இசையில் மூழ்கடிக்கின்றன. கதைச்சூழலுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ற பின்னணி இசை, திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்த உதவுகிறது.
மிலனின் கலை வடிவத்தில் களைகட்டும் திருவிழா, மழை, நெல்விளையும் நிலம் என அனைத்தையும் தன் ஒளிப்பதிவில் வண்ணமயமான காட்சிகளாக்கியுள்ளார் வெற்றி. திலீப் சுப்புராயனின் வெரைட்டியான சண்டைப் பயிற்சிகள் ஆக்ஷன் காட்சிகளில் 'சூப்பர்' சுப்புராயன் என பாராட்ட வைக்கிறது. குறிப்பாக வேட்டிக்கட்டிக்கொண்டு பைக்கில் ரவுண்டு கட்டி மழையில் ரவுடிகளை அலறவிட்டு மகளைக் காப்பாற்றும் ஃபைட்டில் ‘வீரம்’ தெறிக்கிறது. அவ்வப்போது வீரத்தையும் நினைவுபடுத்துகிறது. இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப நீள-அளவுகளை கச்சிதமாக ‘கட்’ செய்து 'விஸ்வாசத்தை' காட்டியுள்ள ரூபன், இரண்டாம் பாதியினில் இன்னும் 'விவேகமாய்' செயல்பட்டிருக்கலாம்.
தாமதமாக அறிமுகமாகும் பலவீனமான வில்லன், அவருக்கு, ரொம்பத் தாமதமாக காட்டப்படும் பிளாஷ்பேக் எல்லாம் சேர்ந்து வில்லனுக்கான மோட்டிவ்-வை உருவாக்க சற்று பாடாய்ப் பட்டாலும், எப்படியோ இறுதியில் கதையுடன் இணைந்து திரைக்கதையை உறுதி ஆக்குகிறது. எனினும் பார்த்துப் பார்த்து இத்தனை செய்தும் அஜித்துக்கேற்ற வெயிட்’டான வில்லனாக இன்னும் சித்தரித்திருக்கலாம்.
வெளிநாடு செல்லும் அளவுக்கு திறமையான டாக்டர் நிரஞ்சனா, அரிவாளால் வெட்டுப்பட்ட, தன் குழந்தைக்கு முதலுதவி செய்யக்கூட முடிவெடுக்காமல் மருத்துவமனைக்கு ஓடுவது போன்ற சின்னச்சின்ன லாஜிக் இடித்து உதைத்தாலும், கதையும் கதைக்களமும் புதிதில்வை என்றாலும், திருப்பங்களும் எமோஷனலும் நிறைந்த சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ஆடியன்ஸின் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர்.
சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான முந்தைய படங்களில் குடும்பம் சார்ந்த கதைக்களமும், அதில் செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் பேக்கேஜூம் இருந்தது. அதே ஃபார்முலாவில் மீண்டும் பயணித்து மாஸாக சண்டை, ரொமாண்ட்டிக்காக காதல் என இளைஞர்களை ஒருவிதமாக கவர்ந்ததோடு, அப்பா-மகள் உறவின் ஆழமான செண்டிமெண்ட்டும், கணவன் - மனைவி உறவின் அன்பான செண்டிமெண்ட்டும் கலந்து உருவாகி குடும்ப ஆடியன்ஸை கவர்வதிலும் வெற்றிகண்டிருக்கிறது விஸ்வாசம். ரசிகர்களுக்கு இது 'விஸ்வாவ்சம்'!