தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் என எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'வட சென்னை' ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
சொந்த இடத்தில் இருந்து அப்பாவி மக்களை அடித்து விரட்டி நிலத்தை அபகரிக்கத் துடிப்பவர்களிடம் இருந்து மண்ணின் மைந்தர்கள் அந்த நிலத்தை பாதுகாக்க எப்படி போராடுகிறார்கள்? என்பதுதான் வட சென்னை படத்தின் கதை. கேங்ஸ்டர், அரசியல் என ரத்தமும் சதையுமாக திரைக்கதையை உயிரோட்டத்துடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
தனுஷ் அன்புவாகவே படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். கதைக்கு ஏற்றவாறு தனது உடல் எடையை ஏற்றி, இறக்கி அவர் நடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. படத்தின் நாயகிகளாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இருவருமே நன்றாக நடித்துள்ளனர். தரமணிக்கு பின் சொல்லிக்கொள்ளும் படங்களில் ஒன்றாக ஆண்ட்ரியாவுக்கு வட சென்னை நிச்சயம் இருக்கும். இதேபோல பிற நட்சத்திரங்களும் உடல்மொழி, பேச்சு என அச்சு அசலாக தங்களது கதாபாத்திரத்தில் பொருந்திப் போகின்றனர்.
மண்மணம் மாறாமல் படமெடுப்பதில் தான் ஒரு வித்தகர் என்பதை வெற்றிமாறன் இப்படத்தில் நிரூபித்து இருக்கிறார். எல்லா நடிகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து தெளிவான திரைக்கதையை அமைத்திருக்கிறார். படம் நடக்கும் காலகட்டங்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றிமாறனின் உழைப்பு பளிச்சிடுகிறது.
பல்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் வட சென்னையை வேல்ராஜின் ஒளிப்பதிவு தூணாகத் தாங்கிப் பிடித்திருக்கிறது. இதேபோல பாடல்கள், பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் மிரட்டியிருக்கிறார். ஜி.பி.வெங்கடேஷ், ராமரின் எடிட்டிங் படத்துக்கு பெரும் பக்கபலம். குறிப்பாக முன்பின்னாக நகரக்கூடிய கதையில் காட்சிகளைத் தொகுத்துக் கொடுத்த விதம் சிறப்பு. மொத்தத்தில் அன்புவின் எழுச்சியை(வட சென்னை-II) விரைவில் திரையில் காண.. வி ஆர் வெயிட்டிங் வெற்றி மாறன்!