பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து ஆலை என்ற பெயரில் கொடிய தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் ஃபேக்டரியை தமிழக மலை கிராமம் ஒன்றில் துவங்க பணம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிக்கிறார் உள்ளூர் அரசியல்வாதி. அந்த கெமிக்கல் ஃபேக்டரியால் அக்கிராம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ? அதற்கு உரிய தீர்வு கிடைத்ததா ? என்பதே உறியடி 2 படத்தின் கதை.
உறியடியில் லெனின் விஜய் என்ற கல்லூரி மாணவனாக, தன்னை சுற்றி நிகழும் சாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் குமார், அதன் இரண்டாம் பாகத்தில் வேலைக்கு செல்லும் இளைஞன் லெனின் விஜய்யாக தோன்றுகிறார். அதற்கேற்றார் போல காலம் அவருக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கியிருக்கிறது.
இந்த முறை சாதிக்கு எதிராக மட்டுமல்லாமல், சமூக அநீதிகளை தட்டிக் கேட்கும் துடிப்பு மிக்க இளைஞராக முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரை தவிர படத்தில் பெரும்பாலானோர் புதுமுகங்கள். அவர்கள் தங்களுக்கு தரப்பட்ட வேடத்தை வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மக்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் செய்யும் சாதிக் கட்சிகள், காலத்துக்கேற்றார் எப்படி மாறுகிறார்கள் என்பதை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்.
மேலும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் முதலாளி வர்க்கம், மக்கள் நலன் குறித்து துளியும் அக்கறையில்லாமல் சுயநலமாக செயல்படும் அரசியல்வாதிகள் என படத்தின் கேரக்டர்கள் உண்மைக்கு நெருக்கமாக இருக்கின்றன.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பது போன்று தேர்தல் நேரத்தில் படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் கருத்துகள் வரவேற்கக்கூடிய ஒன்று. 'கடவுள் கிட்ட நிஜமா இருனு வேண்டிக்கிட்டேன்', 'அரசியலில் நாம தலையிடணும். இல்லனா அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிட்ரும்' போன்ற வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.
ஒரு கெமிக்கல் ஃபேக்டரி - அது முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மிகவும் தெளிவாக காட்சி படுத்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக இடைவேளைக்கு முன்னால் வரும் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாக, மனதில் திகில் கிளப்பியது. அந்த காட்சிகளுக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் , பிரவீன் குமாரின் ஒளிப்பதிவும் திரில்லர் படத்துக்கு நிகரான அதிர்வுகளை வழங்கியது.
தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றாலும், அந்த நீளமான மருத்துவமனை காட்சிகள் சில ரசிகர்களுக்கு தொய்வு ஏற்படுவது போன்று தோன்றலாம். சாதி, மக்கள் நலன் ஆகியவற்றுக்கு அரசியல் தான் தீர்வு என பாஸிட்டிவான விஷயங்களை பேசிவிட்டு, வழக்கமான பழிவாங்கல் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
தமிழகத்தில் கடந்த வருடங்களாக நடைபெற்றுவரும் சமூக பிரச்சனைகளை அழுத்தம் திருத்தமாக பேசியவகையில் உரியடி 2 வரவேற்கத்தக்க முயற்சி.