ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் தயாரிப்பில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது இரா. சரவணனின் இயக்கத்திலான ‘உடன்பிறப்பே’.
ஜோதிகாவின் 50வது படம் என்கிற கார்டுடன் படம் தொடங்குகிறது. ஜோதிகாவின் கணவர் சமுத்திரகனி எதையும் சட்ட வழியில் அணுகுகிறார். ஜோதிகாவின் அண்ணன் சசிகுமார் சத்தியத்தை நம்புகிறார். அடிதடியிலும் இறங்குகிறார். சசிகுமாரின் இந்த குணத்தால் மகனை இழக்கும் சமுத்திரகனி தீரா பகையுடன் நிற்கிறார். மனதளவில் ஒன்றாக இருந்தாலும் ஜோதிகா & சசிகுமார் குடும்பமாக ஒன்றாகிறார்களா? என்பதுதான் இந்த ‘உடன்பிறப்பே’.
கிராமத்து பெண்ணாகவும், தங்கையாகவும், மனைவியாகவும், ஊர் பெரிய மனுஷியாகவும், ‘சின்னாயி’யாகவும் பொருந்துகிறார் ஜோதிகா. அதிலும் க்ளைமாக்ஸில் கலையரசனுடான காட்சியில் ஜோதிகா ரௌத்திரம் காட்டுகிறார். வழக்கம்போல் பாசம், தோழமை, பழி, துரோகம் என எல்லாவற்றையும் சந்திக்கும்போது ஆக்ஷன், செண்டிமெண்ட் என அசால்டு பண்ணுகிறார் சசிகுமார். சமுத்திரகனியின் நேர்த்தியான நடிப்பு அவரது பாத்திரத்துக்கும் படத்துக்கும் பலம் சேர்க்கிறது. சசிகுமாரின் மனைவியாக வரும் சிஜா ரோஸ் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.
டைமிங் காமெடியுடன் குணச்சித்திர நடிப்பிலும சூரி தேர்கிறார். கலையரசன், நரேன், வேல ராமமூர்த்தி அனைவருமே பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கின்றனர். எனினும் அழுத்தமான கேரக்டர் ஸ்கெட்சிங் மிஸ்ஸிங். ஒரு காட்சிக்கு வந்தாலும் நெஞ்சில் நிற்கும்படியாய் இருக்கிறது தீபாவும் அவர் பேசும் வசனமும்.
‘அண்ணே யாரண்ணே’ உட்பட கதையோடு சேர்ந்த பாடல்கள், கமர்ஷியலான பின்னணி இசை என வெளுக்கிறார் டி.இமான். கச்சிதமான எடிட்டிங்கால் கதையோட்டத்தை தருகிறார் ரூபன். காட்சி உணர்வுக்கும் கதைச்சூழலுக்குமான கலர் டோனில் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு.
‘சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணச் சொல்லி கட்டாயப் படுத்துறதெல்லாம் அந்த காலம்’, ‘போலியோ சொட்டு மருந்து போடணும்’, ‘போலீஸ் நடுத்தெருவுல நிப்பாங்கனு ஹெல்மெட் போடாதீங்க.. உங்க குடும்பம் நடுத்தெருவுல நிக்க கூடாதுனு ஹெல்மெட் போடுங்க’, ‘சிகிச்சைக்காக, தாலிய கழட்டி அடகு வைக்க குடுத்தா, புருஷனுக்கு எதுவும் ஆகாது.. கொடுக்காம இருந்திருந்தா ஹாஸ்பிடல்ல 2 உயிருக்கு எதாவது ஆயிருக்கும்’, ‘குழந்தை இல்லனு 2வது கல்யாணம் பண்றதுனா என் பொண்டாட்டிக்கு பண்ணி வைங்க.. பொம்பளைங்க 2வது கல்யாணம் பண்ணா குழந்தை பொறக்காதா?’ என படம் நெடுக சவுக்கடி வசனங்கள்.
அநேக இடங்களில் சீரியல் டைப் வசனங்களும், அழுகாட்சிகளும் என ‘தூக்கலான’ செண்டிமெண்ட் சற்று அலுப்புதான். நீட்டி முழக்கும் நீளத்தையும், கதையை விட்டு வெளிசெல்லும் காட்சிகளையும் வெட்டியிருக்கலாம். எல்லா பிரச்சனைக்கும் சசிகுமார்தான் காரணம் என நம்பும் சமுத்திரகனி, இறுதியில், தன்னை பழிவாங்க தன் மகளுக்கு நடந்த ஸ்கெட்ச் தெரியாமலேயே மனம் மாறுவது ஏற்கும்படியாக இல்லை.
ட்ரேட்மார்க் கிராமத்து அண்ணன் - தங்கை பாச கதையை சஸ்பென்ஸ், த்ரில்லர், ட்விஸ்ட், பெண்ணியம் என முற்போக்காக கொடுக்க முயற்சித்தமைக்கு மொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுகள்.