சிறுவயதில் அம்மா, அப்பாவை இழக்கும் விஜய் சேதுபதி, தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் வறுமை காரணமாக வளர்ந்த விஜய் சேதுபதி தங்கை, தன்னை நம்பும் ஏரியா மக்கள் என யார் மீதும் எதன் மீதும் நேசம் அக்கறை இல்லாமல் இருக்கிறார். ஆனால் தேர்தல் அரசியலுக்காக மக்களிடம் பாசமாக இருப்பதுபோல் நடிக்கிறார்.
ஜே.கே.நகரில் பெரும் புள்ளியான பார்த்திபனின் கட்சியில் பதவியை பிடிக்க அவருக்கு ஜிங் ஜக் அடித்து, ‘அமைதிப்படை’ சத்யராஜ் ஸ்டைலில் தீயாய் வேலை பார்க்கும் விஜய் சேதுபதி, பார்த்திபனுக்கு விஸ்வாசமாக இருக்கும் ‘மங்களம்’ எனும் கேரக்டரில் வரும் பக்ஸ்க்கு வேட்டு வைக்கிறார். கடைசியில் அந்த தொகுதியில் விஜய் சேதுபதி வெற்றி பெறுகிறார். அந்த இடத்தை கார்ப்பரேட்டுக்கு 50 கோடி ரூபாய்க்கு விற்க பார்த்திபனுடன் இணைந்து விஜய் சேதுபதி சம்மதிக்க, ஆனால் அந்த பணம் காணாமல் போய்விடுகிறது. அதை இடம் கைமாறிய விவகாரம் மீடியாவுக்கு ஆதாரத்துடன் தெரியவருகிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? யார் இதையெல்லாம் செய்கிறார்கள்? என்பதை விஜய் சேதுபதி தேடி கண்டுபிடிப்பதே கதை.
இதனிடையே விஜய் சேதுபதிக்கு தலையில் அடிப்பட்டு அவரின் நடவடிக்கை மாறுகிறது. விஜய் சேதுபதியின் இந்த உண்மை குணமும், வித்தியாச நடத்தையும் அவரின் நெருங்கிய நண்பன் கருணாகரனுக்கு மட்டுமே தெரிய, இந்த சிக்கல்களை சமாளித்து, தொகுதி மக்களின் இடத்தை விஜய் சேதுபதி எப்படி பார்த்திபனிடம் இருந்து மீட்கிறார் என்பது சுவாரஸ்யமாக, திரைக்கதையாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி ஒரு ஸ்பிலிட் பெர்சானிலிட்டியாக இந்த படத்தில் அசால்டு செய்துள்ளார். ஹீரோயினுக்கே உண்டான வந்து போகும் வேலை ராஷி கண்ணாவுக்கு. வசனமே இல்லாமல் மௌனமாக இருந்தாலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் மஞ்சிமா. ‘நியூஸிலாந்து நியூஸ்’, ‘எங்கிட்டயே உள்ளே வெளியேவா’ என பார்த்திபன் தனக்கே உரிய மாடுலேஷினில் அசத்துகிறார்.
பின்னணி இசையில் பட்டையை கிளப்புகிறார் கோவிந்த் வசந்தா. மனதில் நிற்கும் பாடல்கள் இல்லை என்றாலும் கதைச் சூழலுடன் பொருந்திவருகின்றன. காட்சிக்கு காட்சி பரிசோதனை முயற்சிகளில் வேற லெவல் உழைப்பைக் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.
எடுத்துக்கொண்ட அரசியல் தர்பார் களத்தில் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன், வழக்கமான அண்ணன் - தங்கை சண்டை, எதிர்பாராத நிறைவு, வழக்கமான காதல் - எதிர்பாராத முடிவு என சுவாரஸ்யமான திரைக்கதையால் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். அமைதிப்படை நாகராஜன் சோழன் பாத்திரத்தை முற்றிலும் புதிய வடிவத்தில் நினைவுபடுத்தும் விஜய் சேதுபதி கேரக்டரை, அதைச்சொல்லி க்ளைமாக்ஸில் ‘அமாவாசையாக’ வரும் சத்யராஜே பாராட்டுகிறார்.
ஆரம்ப காலத்தில் வி.சே நடித்த பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற ஒவ்வொரு படங்களிலும் ஒரு மனப்பிறழ்ச்சி இருப்பவராக நடித்திருப்பார். அதேபோன்று ஒரு புதிய பரிசோதனை முயற்சியாக இந்த கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்கள். கருணாகரன், பக்ஸ், பார்த்திபன் என டார்க் ஹியூமர் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கும் நடிகர்கள், என்கேஜ் பண்ணும் திரைக்கதை, ஆங்காங்கே திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கும் காமெடி என இருக்கும் சின்ன கேப்களில் கூட ஸ்கோர் செய்துள்ளார்கள்.
அரசியல் கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் முடிச்சுகளை போட்டும், அவிழ்த்தும் திரைக்கதையை பலப்படுத்தி இருக்கலாம். 50 கோடி ரூபாய்க்குள் சுற்றாமல் கொஞ்சம் கதை விரிந்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு மாஸ் ஹீரோ டபுள் ஆக்ட் செய்து நடிக்கும் வழக்கமான கதைகளையே பார்த்து அலுத்துப் போவதற்கு மாற்றாக, அதில் ஒரு புதிய ஃபேண்டசி சேர்க்கப்பட்டு, பொலிடிகல் காமெடி த்ரில்லராக போகும் துக்ளக் தர்பாரின் திரைக்கதை ரசிக்க வைக்கிறது.