தினேஷ் கண்ணன் & வினோத் குமார் தயாரிப்பில், விக்னேஷ் கார்த்திக் எழுத்து - இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி, முரளி ராதாகிருஷ்ணன், சுபாஷ் செல்வம், அனன்யா ராம் பிரசாத், சௌந்தர்யா பாலநந்தகுமார் மற்றும் பலர் நடிப்பில் SonyLiv-ல் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் திட்டம் இரண்டு (Plan B).
ஆதிரா எனும் போலீஸாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேருந்து பயணத்தில் ஒரு இளைஞனை சந்திக்கிறார். அவரை ஐஸ்வர்யாவுக்கு பிடித்துவிட, மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள், இருவருக்கும் சொல்லப்படாத ஒரு உணர்வும் உறவும் மலர்கிறது. இதனிடையே தனது சிறுவயது முதலான நெருங்கிய தோழி அனன்யா (ஆடை பட புகழ்) திடீரென கொல்லப்படும் வழக்கை விசாரிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் களம் இறங்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தோழிக்கு என்ன ஆனது? ஐஸ்வர்யா ராஜேஷின் காதல் என்ன ஆனது? இரண்டு கதைகளும் க்ளைமாக்ஸ் எனும் புள்ளியில் இணைந்து எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்டை கொடுக்கின்றன.
காதலனிடம் மனதை பறிகொடுக்கும்போதும், போலீஸாக திமிரும்போதும் என வெரைட்டி நடிப்பில் கெத்து காட்டுகிறார் ஐஸ். சுபாஷ் செல்வம் கேரக்டருக்கு சபாஷ் சொல்வோம்! ஆடை படத்தில் நடித்த அனன்யா ராம் பிரசாத், இப்படத்தில் நடித்திருக்கும் கேரக்டருக்கும், அதை அவர் வெளிக்கொணர்ந்த விதத்துக்கும் சல்யூட்! சமூக புரிதலையும், பாலின புரிதலையும் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் கோகுல் ஆனந்த் கேரக்டருக்கு பாராட்டுக்கள்.
இரவு நேர காட்சிகள், பிளாஷ்பேக்கில் வரும் அழுத்தமான காட்சிகள் என எமோஷன்களுடன் ஒட்டி உறவாடுகிறது கோகுல் பெனோயின் ஒளிப்பதிவு. சீட்டில் கட்டிப் போடுகிறது CS பிரேம்குமாரின் கச்சிதமான கட்டிங். சதீஷ் ரகுநாதனின் பின்னணி இசை படத்தின் பரபரப்பு குறையாமல் நகர்த்துகிறது. சூழலுக்கு ஏற்ற பாடல்கள் கதைக்கு உதவுகின்றன.
பாவல் நவகீதன் கொலை செய்ய வரும்போது, தனியாக வீட்டில் இருக்கும் மாடர்ன் இளம் பெண் நள்ளிரவில் கதவை திறந்து வைத்துவிட்டு டிவி பார்க்கும் அளவுக்கா சிட்டியில் அவேர்னஸ் இல்லை? படம் முழுவதும் யார் வேண்டுமானாலும் யாருடைய வீட்டுக்குள்ளேயும், நள்ளிரவு நேரத்தில் கூட எளிமையாக நுழைய முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் பள்ளித் தோழி அனன்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸாக பணிபுரியும் கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளேயே வசிக்கிறார். அதே எல்லைக்குள் விபத்துக்குள்ளாகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றலில் விட நினைக்கும் கோகுலும் அனன்யாவும் சுபாஷ் செல்வமும், அனன்யாவின் விபத்தை அல்லது மரணத்தை ஏன் ஐஸ்வர்யா ராஜேஷின் இன்வெஸ்டிகேஷன் வளையத்துக்குள் தானாக சென்று விடவேண்டும்? பிறகு ஐஸ்வர்யா அந்த கேஸை கண்டுபிடிக்க வரும்போது, மாற்றி மாற்றி கதை சொல்ல வேண்டும்? என்று லாஜிக் சறுக்கல்கள் இருக்கவே செய்கின்றன.
எனினும் வழக்கமான காப் ஸ்டோரி பில்டப்ஸ் இல்லாததும், படத்தின் நீளமும் பெரிய ஆறுதல். சுவாரஸ்யமாகவும் என்கேஜிங்காகவும் இருக்கும் திரைக்கதையும், அதற்கேற்ற விஷூவல்ஸூம் படத்துக்கு பலம். படம் முழுக்க யூகிக்க வாய்ப்பு கொடுத்து, நழுவியது அபாரம். ஃபிளாஷ்பேக் ஸ்டோரிக்கான மெனக்கெடலும், அதை ஏற்கும்படியாக சர்ச்சைக்கு இடமின்றி சொன்ன விதமும் அற்புதம். முற்றிலும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் இந்த சமூகத்தின் தற்போதைய கவனத்தை கோருகிறது. ஒரு மெலோடியான க்ளைமாக்ஸாக இருந்தாலும் அதில் அழுத்தமான கருத்தை பதித்திருக்கிறார்கள்.