கார்த்தி,ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தம்பி. வியாகாம் 18, பேரலல் மைன்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவராக சத்யராஜ், மனைவி சீதா, மகள் ஜோதிகாவுடன் வசித்து வருகிறார். மேலும் சத்யராஜ் பழங்குடி மக்களின் நிலங்களை மீட்க போராடி வருகிறார். இந்நிலையில் 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகனாக வருகிறார் கார்த்தி. பின்பு ஏற்படும் திருப்பங்களே படத்தின் கதை.
கோவாவில் பிழைப்புக்காக சிறு சிறு தவறுகள் செய்யும் ஜாலி இளைஞராக கார்த்தி, துறு துறு நடிப்பால் அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். தம்பியை இழந்துவாடும் அக்காவாக, அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் துணிச்சலான பெண்ணாக நடிப்பில் மிளிர்கிறார் ஜோதிகா. பொறுப்பான குடும்பத் தலைவனாகவும் தன்னை சார்ந்த மக்களுக்கு துணை நிற்கும் ஊர் தலைவனாக சத்யராஜ் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் தனக்கே உரிய லொள்ளுடன் கூடிய வில்லத்தனம் காட்டும் இடத்தில் மாஸ். குறைவான நேரமே வந்தாலும் வசீகரிக்கிறார் நிகிலா.
சௌகார் ஜானகி, ஹரிஷ் பேரடி, பாலா, மாஸ்டர் அஸ்வத், இளவரசு, சீதா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் தங்கள் வேடங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர். ஒரு திரில்லர் படத்துக்கு தேவையான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் கோவிந் வசந்தா. ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக அழகாகவும், அதே நேரம் படத்துக்கு தேவையான மர்மத்தையும் பதிவு நேர்த்தியாக செய்திருக்கிறது
படத்தில் முக்கிய கேரக்டர்களை வடிவமைத்த விதம் நன்றாக இருந்தது. உதாரணமாக இவர்கள் தான் முதன்மை வேடம் என்றில்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் அந்தந்த வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்டுகள் நன்றாக படமாக்கப்பட்டு படத்தின் சுவாரஸியத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.
கார்த்தி சௌகார் ஜானகி, மாஸ்டர் அஸ்வத் ஆகியோருக்கிடையேயான காட்சிகள் ரசிக்கும் படி இருந்தன. குறிப்பாக வாய் பேச முடியாதவரான சௌகார் ஜானகி பார்வையாலேயே கார்த்தியை மிரட்டும் காட்சிகள் சிரிப்பை வரவழைத்தன. படத்தின் முக்கிய அம்சமான சென்டிமென்ட் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மெதுவாக நகரும் முதல் பாதி படத்தின் சுவாரசியத்தை குறைக்கின்றன. படத்தில் முக்கிய பிரச்சனைகள் நம்பும்படியாக பதிவு செய்யப்படவில்லை.